நியூசிலாந்தில் புகைப்பிடித்தல் மீதான தடையை நீக்குவதற்கான திட்டங்களை கைவிடுமாறு Hāpai Te Hauora வின் இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரி அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கம் நியூசிலாந்தில் புகைப்பிடித்தல் மீதான தடையை நீக்க உள்ளதாக கடந்த ஆண்டு அறிவித்தது.

இந்நிலையில் தேசிய மாவோரி பொது சுகாதார அமைப்பான Hāpai Te Hauora, கடந்த ஆண்டு முதல் இந்த தடையை நீக்குவதற்கான திட்டத்தை ரத்து செய்யுமாறு அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்து வந்தது.

இந்நிலையில் Hāpai Te Hauora இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரி ஜேசன் அலெக்சாண்டர் தற்போது கூறுகையில், புகைப்பிடித்தல் மீதான தடை சட்டத்தை ரத்து செய்வது உயிர்களையும் பொருளாதாரத்தையும் இழக்கும் மற்றும் நாட்டின் ஏற்கனவே அதிக சுமை கொண்ட சுகாதார அமைப்புக்கு தொடர்ந்து சுமையை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.

தற்போதைய நடைமுறையில் உள்ள இந்த சட்டத்திற்கு பலர் ஆதரவு தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.

ஒவ்வொரு நாளும் எங்கள் சமூகங்களிடம் பேசும்போது, ​​மக்கள் இந்த சட்டங்களை விரும்புகிறார்கள், அவை உலக முன்னணி சட்டங்களாக இருந்தன, எனவே நாங்கள் அவற்றை தொடர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

கடந்த டிசம்பர் மாதம் வெலிங்டன் மற்றும் ஆக்லாந்தில் புகைப்பிடித்தல் மீதான தடை சட்டத்தை ரத்து செய்யும் அரசின் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பேரணிகள் நடந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்தி நிருபர் - புகழ்