ஆக்லாந்தின் புறநகர் பகுதியான Ellerslie இல் நேற்றைய தினம் இரவு முதியவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்ததை அடுத்து அவரது மனைவியை பொலிஸார் தேடி வருகின்றனர்.

நேற்று இரவு 8 மணியளவில் Celtic Crescent இல் உள்ள ஒரு வீட்டில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

66 வயதுடைய முதியவர் ஒருவரே இவ்வாறு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது ஒரு கொலையாக கருதப்படுகிறது. எனினும், பிரேதப் பரிசோதனை முடிவடையும் வரை அது உறுதிப்படுத்தப்படாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்தில் காணப்படும் சூழ்நிலை காரணமாக இது ஒரு கொலையாகவே கருதப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இன்று சாலையின் நடுவில் தடயவியல் கூடாரம் அமைக்கப்பட்டு விசாரணைகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் உயிரிழந்தவரின் 67 வயது மனைவி Mei Han Chong என்ற பெண் தற்போது காணாமல் போயுள்ள நிலையில் அவரை பார்த்த அல்லது அவருடன் தொடர்பு கொண்ட எவரும் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் ஸ்காட் பியர்ட் கூறினார்.

Mei Han Chong ஆசிய வம்சாவளியைச் சேர்ந்தவராகவும், உயரத்தில் சிறியவராகவும், குட்டையான அடர் சாம்பல் நிற முடி கொண்டவராகவும், கண்ணாடி அணிந்தவராகவும் இருப்பார்.

மேலும் சம்பவம் நடந்த வீட்டில் கடைசியாகக் காணப்பட்ட NJN927 என்ற நீல நிற கியா ரியோ வாகனத்தை பற்றிய ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

செய்தி நிருபர் - புகழ்