தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் 1930 மற்றும் 40ம் ஆண்டு காலகட்டத்தில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாகி வருகிறது.

இதில் தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன், சந்தீப் கிஷன், சதீஷ், ஜான் கொக்கென், இளங்கோ குமரவேல், கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் சகோதரர் சிவராஜ்குமார் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் தனுஷின் பிறந்த நாளன்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்குகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், தமிழ், தெலுங்கு, இந்தியில் ஒரே நேரத்தில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. கமல்ஹாசனின் இந்தியன் 2, ரஜினிகாந்தின் ஜெயிலர் படங்கள் தீபாவளிக்கு வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தையும் தீபாவளிக்கு அதிரடியாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்தில், அமெரிக்க நடிகர் எட்வர்ட் சோனென்ப்ளிக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய ஆர்ஆர்ஆர் படத்தில் எட்வர்ட் பாத்திரத்தில் நடித்து பிரபலமான இவர், இப்படத்தில் தற்போது ஒப்பந்தமாகி உள்ளார்.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.