சென்னை வடபழனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஷால், “2026 சட்டப்பேரவை தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவேன். ‘செல்லமே’ படம் வரும்போது சில திரையரங்குகள் இருந்தன. ‘பூஜை’ படம் வரும்போது, மல்டிப்ளக்ஸ் திரையரங்குகள் வந்தன.

இன்று ஒரு திரையரங்குக்கு சென்றால், 6,7 படங்கள் இருக்கும். அதில் நீங்கள் எது வேண்டுமோ அதற்குச் செல்லலாம். மக்கள் ஓடிடியில் அனைத்து தரப்பு படங்களையும் பார்த்துவிட்டார்கள். இனி அவர்களை ஏமாற்ற முடியாது. காப்பி அடித்தால் கூட கண்டுபிடித்து விடுவார்கள்.

அதேபோல தான் 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுபவர்களின் பட்டியலும் இருக்கும். அழகான அந்த பட்டியலில் மக்கள் தேர்வு செய்ய நிறைய பேர் இருப்பார்கள். அவர்கள் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம். நிச்சயம் மிகப்பெரிய பட்டியலாக இருக்கும்” என்றார்.

கூட்டணி அமைத்து போட்டியிடுவீர்களா? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “தனியாகத்தான் வருவேன். முதலில் நான் யார் என்பதை காட்ட வேண்டும். பிறகு தான் கூட்டணி. அடுத்த கட்ட விஷயங்களை பின்பு பார்ப்போம்” என்றார்.