பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்குச் சம்பள நிர்ணய சபையினூடாக ஆயிரம் ரூபாயை வழங்குவதால், வருடத்துக்கு 69 ஆயிரம் ரூபாயைத் தொழிலாளர்கள் இழப்பர் எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரமேதாஸ, சம்பள நிர்ணய சபையினூடாகச் சம்பளம் அதிகரிக்கப்படும் பட்சத்தில் கூட்டு ஒப்பந்தத்தால் தொழிலாளர்கள் பெற்றுக்கொண்ட 28 வரப்பிரசாதங்களைத் தொழிலாளர்கள் இழப்பார்கள் எனவும் எச்சரித்துள்ளார்.

அதன்படி ,பாராளுமன்றத்தின் நேற்றைய அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர், 'பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வைத் தருவதாகக் கூறி, ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற அரசாங்கம், அந்த வாக்குறுதியை இதுவரையில் நிறைவேற்றவில்லை. அடிப்படைச் சம்பளமாக 900 ரூபாயையும் மேலதிகக் கொடுப்பனவாக 100 ரூபாயையும் வழங்கி ஆயிரம் ரூபாயை வழங்குவதற்கு சம்பள நிர்ணய சபை தீர்மானித்துள்ளது. எனினும் 750 ரூபாயைச் சம்பளமாகத் தொழிலாளர்கள் பெறும்போது, வருடத்துக்கு 300 நாள்கள் வேலை செய்ய வேண்டுமெனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இருப்பினும் , தற்போது 1,000 ரூபாய் சம்பளத்தை வழங்கிவிட்டு, வெறும் 13 நாள்களுக்கு மாத்திரம் வேலையை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி வருடத்துக்கு 156 நாள்கள் மாத்திரமே தொழிலாளர்கள் வேலை செய்ய முடியும். எனினும், 750 ரூபாய் சம்பளத்தைப் பெறும்போது, தொழிலாளர்கள் வருடத்துக்கு 2 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாயைச் சம்பளமாகப் பெறமுடியும். ஆனால், தற்போது வருடத்துக்கு 156 நாள்கள் மாத்திரம் வேலை வழங்கப்படும் என்பதால் தொழிலாளரக்ளுக்கு வெறும் 1 இலட்சத்து 56 ஆயிரம் ரூபாயை மாத்திரமே வருடத்துக்கு சம்பளமாகப் பெற்றுக்கொள்ள முடியும். இதனூடாக தொழிலாளர்களுக்கு வருடமொன்று 69 ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்படும்.

மேலும் ,சம்பள நிர்ணய சபையால் சம்பளம் அதிகரிக்கப்படும் பட்சத்தில் கூட்டு ஒப்பந்தத்தினூடாகத் தொழிலாளர்களுக்குக் கிடைத்த 28 வரப்பிரசாதங்களும் இல்லாமல் போகும். ஆயிரம் ரூபாயைப் பெற்றுக்கொடுப்பது நல்லது. ஆனால் வேலை நாள்களும் 300 நாள்கள் வழங்கப்பட வேண்டும்' எனவும் தெரிவித்தார்.