சம்பள நிர்ணய சபையில் இன்றைய தினம் (2021.02.08) நடைபெற்ற  பேச்சுவார்த்தையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பள உயர்வை வழங்குவதற்கு அனுமதியளிக்கப்பட்டமை தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகள் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான், துணைத் தலைவரும் பிரதமரின் மாவட்ட ஒருங்கிணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான், பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ரமேஸ்வரன் ஆகியோர் கௌரவ பிரதமரை விஜேராமவில் உள்ள கௌரவ பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தனர்.

சம்பள நிர்ணய சபையில் இன்றைய தினம் நடைபெற்ற  பேச்சுவார்த்தையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 900 ரூபாய் நாளாந்த சம்பளமும் 100 ரூபாய்  கொடுப்பனவும் வழங்க அனுமதியளிக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அரச தோட்ட நிறுவனங்கள் தோட்டத் தொழிற்சங்கங்களுடன் இணைந்து அங்கீகரிக்கப்பட்ட சம்பளத்திற்கு ஆதரவாக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.