இந்தியா முழுவதும் அக்னிபாத் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், நாட்டில் பல்வேறு இடங்களில் பெரும் வன்முறை வெடித்துள்ளது.

அக்னிபாத் என்ற புதிய இராணுவ புதிய ஆட்சேர்பு கொள்கையை இந்திய மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இத்திட்டத்தின் கீழ் 17.5 வயது முதல் 21 வயதுடையவர்கள் இணையலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சம் 4 ஆண்டுகள் வரை இளைஞர்கள் இத்திட்டத்தின் கீழ் பணிபுரிவார்கள். அவர்களில் 25% பேர் மட்டுமே இராணுவத்தில் நிரந்தரமாக இணைய முடியும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கடும போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இன்று வரை 10 மாநிலங்களில் அக்னிபாத் போராட்டம் விரிவடைந்துள்ளது.

பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் ரயில்கள் தீ வைக்கப்பட்டன. முதலில் வட மாநிலங்களாகப் பீகார், உத்தரப் பிரதேசம், ஹரியானா மாநிலங்களில் மட்டும் தொடங்கிய இந்தப் போராட்டம் மெல்லத் தென் மாநிலங்களுக்கும் பரவியது.

இதேவேளை, தெலங்கானாவில் உள்ள செகந்திராபாத் ரயில் நிலையத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் நேற்று ஒன்றுகூடி, போராட்டம் நடத்தினர். அங்கிருந்த ரயில்களுக்கும் அவர்கள் தீ வைத்துக் கொளுத்தினர். அப்போது போராட்டத்தைக் கட்டுப்படுத்த பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் 19 வயது இளைஞர் உயிரிழந்தார்.

அதேபோல பீகாரில் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள அம்மாநில துணை முதல்வர் ரேணு தேவியின் வீட்டிற்கும் தீ வைக்கப்பட்டது. இதுபோன்ற வன்முறை சமூகத்திற்கு மிகவும் ஆபத்தானது என்றும் இதனால் சமூகத்திற்குத் தான் இழப்பு ஏற்படுகிறது என்றும் ரேணு தேவி தெரிவித்துள்ளார். போராட்டம் தீவிரமடைவதைத் தடுக்கும் வகையில் அங்கு சுமார் 12 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் இன்று காலை பல்லியா ரயில் நிலையத்திற்குள் நுழைந்த கும்பல் ரயில் பெட்டிக்கு தீ வைத்தனர். அதேபோல வாரணாசி, பிரோசாபாத் மற்றும் அமேதி ஆகிய இடங்களிலும் போராட்டங்கள் வெடித்தது. அதில் அரசு பேருந்துகள் மற்றும் பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. அலிகாரில் உள்ளூர் பாஜக தலைவர் ஒருவரின் கார் எரிக்கப்பட்டது.

இந்நிலையில் இதுவரை நாடு முழுவதும் குறைந்தது 12 ரயில்கள் தீவைக்கப்பட்டுள்ளன. மேலும், நாட்டில் 214 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டன. அதேபோல 90 ரயில்கள் சென்று சேர வேண்டிய இடத்திற்குச் செல்லவில்லை. இதன் காரணமாக ரயில் பயணிகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.