'ஃப்ரன்ட்டியர் ஏர்லைன்ஸ்' என்ற விமானம் அமெரிக்காவின் டென்வரிலிருந்து ஆர்லாண்டோ நோக்கிப் பயணித்தது.

அப்போது நடுவானில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தில் பயணித்த கர்ப்பிணி ஒருவர் பிரசவ வலியால் துடித்தார். அந்த நேரத்தில் அவசர சிகிச்சைக்கு மருத்துவர்கள் விமானத்தில் இல்லாதால் விமானத்தை அருகே இருந்த பென்சகோலா விமான நிலையத்தில் தரையிறக்க முடிவு செய்தனர் விமானிகள்.

ஆனால், விமானம் தரையிறங்க நேரமாகும் என்பதை அறிந்த விமான ஊழியர்கள் சமயோசிதமாகச் செயல்பட்டு விமானத்திலேயே பிரசவத்திற்கு உதவி செய்ய முடிவு செய்தனர்.

இதையடுத்து விமான ஊழியரான டயானா ஜிரால்டோ என்பவர் உதவியுடன் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிப் பெண் அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

பின்னர் விமானம் தரையிறங்கியதும் செய்தியறிந்து காத்திருந்த மருத்துவர் குழு தாய் - சேய் இரண்டு பேரையும் பரிசோதித்து இருவரும் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்தனர்.

குழந்தையைப் பெற்றெடுத்த தாய், தன் பெண் குழந்தை நடுவானில் பிறந்ததால் அதனை நினைவுகூரும் வகையில் அந்தக் குழந்தைக்கு ’ஸ்கை’ (SKY) எனப் பெயரிட்டார்.