ஏப்ரல்-21 பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பின் முன்னாள் தலைவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்ட இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பின் முன்னாள் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் நேற்று (12) விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2021 மார்ச் 12ஆம் திகதி கொழும்பு பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் (CTID) ஜமாஅத்தே இஸ்லாமி தலைமையகத்தில் வைத்து அவர் கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். அவரது கைது மற்றும் தடுத்து வைத்தல் சட்டவிரோதமானது என்றும் இலங்கையின் அரசியல் அமைப்பு வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகளின் மீறல் எனவும் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து மனு மீதான பரிசீலனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் 2021 டிசம்பர் 17ஆம் திகதி மேற்படி வழக்கு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது அவரை பிணையில் விடுவிப்பதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் இணக்கம் தெரிவித்திருந்தது. இந்த நிலையிலே உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் நேற்று முன்தினம் பிணையில் விடுவிக்கப்பட்டதாக இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தெரிவித்தது.

ஏற்கனவே 2019 ஆகஸ்ட் 25ஆம் திகதி கொழும்பு குற்றத் தடுப்பு (சி.சி.டி) பிரிவினரால் கைது செய்யப்பட்டு 32 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட பின்னர் அவருக்கு எதிராக எந்த விதமான சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ள அவசியமில்லை என 2019. 08. 25 அன்று பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் (CTID) நீதிமன்றில் சமர்ப்பித்த விண்ணப்பத்தின் பேரில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிணை வழங்கப்பட்ட நிலையில் மீண்டும் சிறையில் தடுத்து வைக்கப்பட்ட அவருக்கு என்ரிஜன் பரிசோதனை நடத்தப்பட்டு அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது நேற்று உறுதி செய்யப்பட்ட பின்னர் நேற்று பிற்பகல் அவர் விடுவிக்கப்பட்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்பு இருப்பதாகவும் தீவிரவாதத்தை பரப்புவதாகவும் தெரிவித்து அவர் பல தடவை விசாரணைக்கு அழைக்கப்பட்டு பின்னர் கைதாகி 10 மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு பிணை வழங்கப்பட்டது தொடர்பில் ஜமாஅத்தே இஸ்லாமி வரவேற்பு தெரிவித்துள்ளதோடு அவர் மீது சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளது. காலம் கடந்தாலும் உண்மை வெளிச்சமாகும் என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.