இந்திய பிரதமருக்கு அனுப்புவதற்காக தமிழ் பேசும் மக்களின் கட்சித் தலைவர்கள் தயாரித்த  கடிதம் இறுதி செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் 29ஆம் திகதி டிசம்பர் மாதம் கொழும்பில் தலைவர்கள் கைச்சாத்திட  ஏற்பாடுகள் நடைபெறுகின்றன  என ஏற்பாட்டாளர்கள் ஆகிய தமிழ் ஈழ  விடுதலை இயக்கத்தின் சார்பில் இச்செயற்பாட்டின் ஒருங்கிணைப்பாளர் குருசுவாமி சுரேந்திரன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்  கடந்த 21ஆம் திகதி  கொழும்பு குளோபல் டவர் ஹோட்டலில் தமிழ் பேசும் மக்களின் கட்சித்  தலைவர்கள்  இந்திய பிரதமருக்கு அனுப்பும் கோரிக்கைகள் அடங்கிய இறுதி செய்யப்பட்ட வரைபை சீர்செய்யும் நோக்கத்திற்காக கூடினர்.

அன்றைய கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழரசுக் கட்சி சமர்ப்பித்த வரைபும்  பரிசீலிக்கப்பட்டது.

இரண்டு வரைபுகளுக்கு இடையிலும்  பெரிய வித்தியாசங்கள் காணப்படாமையினால் தமிழரசுக்கட்சியால் சமர்ப்பிக்கப்பட்ட  வரைபில் உள்ள விடயங்களையும் சேர்த்துக் கொள்ள  இணக்கம்  காணப்பட்டது.

அன்று மாலைவரை நடந்த கலந்துரையாடலில் தலைவர்கள் ஒன்றிணைந்து கடிதத்திற்கான வரைபை இறுதி செய்தனர்.

இணக்கம் காணப்பட்ட விடயங்களுடன் திருத்தியமைக்கப்பட்ட வரைபு  மறுநாள் தலைவர்களால் என்னிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

அவை அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு சீர் செய்வதற்காக அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

அனைத்து தலைவர்களுடைய வழிகாட்டுதலோடும் வரைவு இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.  எதிர்வரும் 29-12-2021, அனைத்து தலைவர்களின் வசதிக்கேற்ப கொழும்பில் இக்கடிதத்தில் கைச்சாத்திட ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

இவ்விடயத்தை செவ்வனே நிறைவேற்றி தமிழ் பேசும் மக்கள் முகம் கொடுத்திருக்கும் பாரிய அரசியல் அச்சுறுத்தல்களை  எதிர்கொண்டு தம் மக்களை மீட்க விட்டுக்கொடுப்போடும், அர்ப்பணிப்போடும் ஒருமித்து செயலாற்ற அனைத்து தலைவர்களும் உறுதி பூண்டுள்ளனர்.