அறிவியல் விஞ்ஞானி ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன் எழுதிய சார்பியல் கோட்பாட்டின் கையெழுத்துப் பிரதி நேற்று நடைபெற்ற ஏலத்தில் ரூ.96.6 கோடிக்கு( 13 மில்லியன் அமெரிக்க டாலர்) விலை போய் உள்ளது.

உலகின் தலைசிறந்த அறிவியல் விஞ்ஞானிகளில் ஒருவரான  ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன், தனது சார்பியல் கோட்பாடுகள் மூலம் இயற்பியல் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர்.

பாரிஸில் உள்ள கிறிஸ்டி என்ற ஏல நிறுவனம், பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் ஆல்பர்ட்  ஐன்ஸ்டீன் கைப்பட எழுதிய பிரதியை ஏலத்திற்கு விட்டது. 

இந்நிலையில், குறித்த சார்பியல் கோட்பாட்டின் கையெழுத்துப் பிரதி,  நேற்று நடைபெற்ற ஏலத்தில் ரூ.96.6 கோடிக்கு (13 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு) விலை போனது.

அதன் ஆரம்ப ஏலத்தொகையை 2 மில்லியனிலிருந்து 3 மில்லியன் யூரோக்களாக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத அரிய விலைக்கு ( 11.7 மில்லியன் யூரோக்கள்) ஏலம் போய் உள்ளது.

ஐன்ஸ்டீன் கண்டுபிடித்த அந்த கோட்பாடு தான், இன்றைய ஜிபிஎஸ் போன்ற அதிநவீன தொழில்நுட்பத்துக்கான அடித்தளமாக அமைந்துள்ளது.

“ஐன்ஸ்டீனால் எழுதப்பட்ட காலமானது,  பொதுச்சார்பியல் கோட்பாட்டு வளர்ச்சியில் ஒரு முக்கியமான கட்டம் ஆகும். கோட்பாடுகள் தொடர்புடைய நூல்களை ஆவணப்படுத்த எஞ்சியிருக்கும் இரண்டு கையெழுத்துப் பிரதிகளில் இதுவும் ஒன்றாகும்" என ஏலத்தை நடத்திய கிறிஸ்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, அவர் கையெழுத்தில் வெளியான கடிதம் அமெரிக்காவில் 1 மில்லியன் யூரோக்களுக்கு  ஏலம் போயிருந்தது. அதன் ஆரம்ப ஏலத்தொகையைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிக தொகைக்கு ஏலம் போயிருந்தது குறிப்பிடத்தக்கது.

எனினும், இந்த ஏலத்தில் இத்தனை பெரிய தொகை கொடுத்து வாங்கிய அந்த அதிர்ஷ்டசாலி யார் என்பதை அந்நிறுவனம் குறிப்பிடவில்லை.