2019ஆம் ஆண்டு  பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தமிழகத்தையே அதிரவைக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தமிழகத்தையே கடந்த இரண்டு ஆண்டு காலத்திற்கு மேலாக உலுக்கிக் கொண்டிருக்கிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி கல்லூரி மாணவி ஒருவர் தன்னை கடத்தி கூட்டு வன்கொடுமை செய்ததாக 5 பேர் மீது பொள்ளாச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில், சபரிராஜன், மணிவண்ணன், வசந்த்குமார், சதீஷ் ஆகிய 4 பேரை போலீசார் முதற்கட்டமாக கைது செய்தனர். பின்னர் வழக்கு சிபிஐ வசம் மாறியதும் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு என்பவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் அடுத்தடுத்து மூன்று பெண்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அதிமுக முன்னாள் மாணவர் அணி செயலாளர் அருளானந்தம், பைக் பாபு, ஹெரோன் பால் ஆகிய மேலும் 3 பேரை சிபிஐ கைது செய்தது.

இதுவரை இந்த வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், அருளானந்தம், ஹேரேன்பால், பாபு, அருண்குமார் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.இதை விசாரித்த நீதிபதி,விரைவாக விசாரணை நடத்தி 6 மாதத்துக்குள் வழக்கை முடிக்க உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்றையதினம் 9 பேரும் கோவை மகளிர் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி நந்தினி தேவி, ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை நகலை சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்க உத்தரவிட்டார். இதையடுத்து 9 பேருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. பின்னர் இந்த வழக்கு விசாரணையை எதிர்வரும் 29ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்

இவ்வழக்கில் 9 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது இதுவே முதல் தடவையாகும்.