பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் உயிரிழந்த சிறுமி தொடர்பிலான விசாரணைகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்க சட்டமா அதிபரினால் சட்டத்தரணிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. 

சட்டமா அதிபர் சஞ்சய ராஜரத்தினம் இன்று (22) மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவொன்றை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அழைத்து கலந்துரையாடி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதன்போது, இதுவரை இடம்பெற்ற விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து சட்டமா அதிபருக்கு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பிலான நாளாந்த நடவடிக்கைகள் மற்றும் தேவையான ஆலோசனைகளை பெற்றுக் கொடுப்பதற்காக பிரதி சொலிசிட்டர் நாயகம் திலீப பீரிஸ் தலைமையிலான சட்டத்தரணிகள் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.