உலகின் முதல் நாடாக இணையதள பணமான பிட்காயினை அதிகாரப்பூர்வ பணமாக பயன்படுத்த எல் சால்வடார் அனுமதி வழங்கியுள்ளது.

மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடாரில் மற்ற நாணயங்களை போல் கிரிப்டோகரன்சியான பிட்காயினையும் மக்கள் சர்வசாதாரணமாக பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிபர் நயீப் புக்ளே தாக்கல் செய்த மசோதாவுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கிடைத்துள்ளதால், 90 நாட்களில் அமலுக்கு வரும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பிட்காயினை அதிகாரப்பூர்வ நாணயமாக்குவதன் மூலம் எல் சல்வேடாரில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும், மற்ற நாடுகளுடன் வர்த்தக ரீதியான அனுகுமுறையை எளிதாக்க முடியும் என அதிபர் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் பிட்காயின் சந்தை மதிப்பு 6 சதவீதம் உயர்ந்து 35 ஆயிரத்து 200 அமெரிக்க டாலர்களில் நிலைபெற்று, ஒட்டுமொத்த மதிப்பு 640 புள்ளி 17 பில்லியன் டாலராக உச்சம் தொட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.