உரிமையாளர் இல்லாத சமூக வலைத்தளங்கள், ஊடாக நாடு, மக்கள், இனங்களுக்கிடையே முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் நபர்களுக்கு எதிராக சில நடவடிக்கைகள் எடுப்பது அவசியம் என தெரிவித்த அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல. இது தொடர்பான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அண்மையில் இதற்குஅமைச்சரவையும் அனுமதி வழங்கியுள்ளது என்றார்.

இதன்படி ,அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று(8) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையில் மாத்திரமல்ல இந்தியா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் பல நாடுகள் சமூக வலைத்தளங்கள் தொடர்பான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவித்த அவர், சில உண்மைகளை எதிர்மறையான ரீதியில் முன்வைக்கும் ஊடகவியலாளர்களால் தான் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் கூறினார்.

இதுபோன்ற சாதகமான அறிக்கைகளை முன்வைக்கும் ஊடகவியலாளர்களுக்கு கூட இது போன்ற சாதகமற்ற செயல்களை வேண்டுமென்றே உருவாக்கும் நபர்களால் சிக்கல் ஏற்படும் என்றும் தெரிவித்தார்.

எனவே, உண்மைகளை முன்வைக்கும் ஊடகவியலாளர்களைப் பாதுகாக்க இந்த நடவடிக்கை உதவும் என தாம் நம்புவதாகவும் தெரிவித்தார்.