பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ள இக்காலாப்பகுதியில், அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோர் பயணிக்கும் வாகனங்களை அடையாளம் கண்டுக்கொள்ளும் வகையில் 11 வகையிலான ஸ்டிக்கர்கள் இன்று (07) முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

  1. பச்சை நிறம் : சுகாதார சேவை
  2. இளம் நீல நிறம் : முப்படையினர் மற்றும் பொலிஸார்
  3. ஊதா நிறம் : தனியார் துறை சார்ந்த அத்தியாவசிய சேவைகள்
  4. இளம் பழுப்பு நிறம் : இறக்குமதி, ஏற்றுமதி, உற்பத்தி, தொழிற்சாலை துறைகளை சார்ந்தவர்களுக்கு
  5. மஞ்சள் : அத்தியாவசிய சேவை வழங்குநர்
  6. சிவப்பு நிறம் : அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்போர்
  7. இளம் மஞ்சள் நிறம் : ஊடகம் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள்
  8. வெள்ளை நிறம் : வெளிநாடு செல்வோருக்கானது.
  9. கருப்பு நிறம் : மனிதாபிமான நடவடிக்கைகள் (மரண வீடுகள், மருத்துவ பரிசோதனை, மருந்து கொள்வனவு)
  10. சாம்பல் நிறம் : உணவு வகைகள் மற்றும் விநியோக சேவை
  11. அரச சேவை மற்றும் அதன் ஏனைய நடவடிக்கைகளுக்காக விசேட நிறத்திலான ஸ்டிக்கர் ஒன்று அறிமுகப்படுத்தப்படுகின்றது.

இந்த வாகனங்களில் ஒட்டப்படும் ஸ்டிக்கர்களில், குறித்த வாகனத்தில் பயணிப்போரின் எண்ணிக்கை குறிப்பிடப்படும் என அவர் கூறுகின்றார்.

இதன்படி, கொழும்பிற்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்கு இந்த ஸ்டிக்கர்கள் ஒட்டப்படவுள்ளமையினால், இன்றைய தினம் கொழும்பிற்குள் பிரவேசிக்கும் நுழைவாயில்களில் கடும் வாகன நெரிசல் ஏற்படக்கூடும் என அவர் தெரிவிக்கின்றார்.

இந்த வாகனங்களில் வேறு நபர்கள் பயணிப்பார்களாயின், அல்லது வேறு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுமாயின், குறித்த வாகனம் பொலிஸாரின் பொறுப்பிற்கு எடுக்கப்படும் என அவர் குறிப்பிடுகின்றார்.

குறித்த ஸ்டிக்கர் நடைமுறையானது, பயணக் கட்டுப்பாடு முடிவுக்கு கொண்டு வரப்படும் வரை செலுப்படியாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.