இந்தியா: தமிழ்நாடு

விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று பிரச்சாரம் செய்தார்.

உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர், திண்டிவனம் ஆகிய இடங்களில் அவர் பேசியதாவது: மீண்டும் மக்களவையில் ரவிக் குமாரின் குரல் ஒலிக்க வேண்டும். ரவிக் குமாரின் வெற்றி முதல்வருக்கு கிடைக்கும் வெற்றி; இண்டியா கூட்டணிக்கு கிடைக்கும் வெற்றி. கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை. உலகளவில் இந்தியாசரிவை நோக்கி சென்றுள்ளது. பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்துள்ளது.

பாஜக ஆட்சியை தூக்கியெறிய வேண்டும். தொடர்ந்தால் பேராபத்தை நாட்டு மக்கள் சந்திக்க வேண்டியிருக்கும். அரசியல் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்து விடுவார்கள். நாட்டு மக்களை காப்பாற்ற, அரசியலமைப்புச் சட்டத்தை காப்பாற்ற முதல்வர் ஸ்டாலின் பெரு முயற்சி எடுத்ததன் விளைவாகத்தான் இண்டியா கூட்டணி உருவானது. இதில் 28 கட்சிகள் உள்ளன. அதில் விசிகவும் அங்கம் வகிப்பது நமக்கு கிடைத்திருக்கும் பெருமை.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை எதிர்ப்பதோ அல்லது அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை எதிர்ப்பதோ எங்கள் வேலை இல்லை. இந்த நாட்டை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கூறு போட்டுக் கொண்டிருக்கிற மோடி அரசை எதிர்ப்பது தான் இண்டியா கூட்டணியின் வேலை. தமிழகம் மட்டுமின்றி இந்தியாவைக் காப்பற்ற வேண்டும் என்ற முதல்வரின் நோக்கத்தை நிறைவேற்ற 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். அதிமுக, பாமக, தேமுதிக, பாஜக கட்சிகளுக்கு இந்தத் தேர்தலில் தக்க பாடத்தை நாம் கொடுக்க வேண்டும் என்றார்.