இந்தியா: தமிழ்நாடு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் திமுக கூட்டணி தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர்,தென்காசி திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் ஆகியோரை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது...

தமிழகத்தில் கோடிக்கணக்கான மக்கள் பயனடையும் வகையில் பொற்கால ஆட்சி நடத்தி வருகிறோம். அந்த வகையில் உங்கள் குடும்பங்களில் ஒருவன் என்ற முறையில் உரிமையோடு வாக்கு கேட்க வந்துள்ளேன்.

திமுகவின் அடிப்படை கொள்கை சமூக நீதி. காமராஜர் ஆட்சி சமூக நீதி ஆட்சியாக இருந்தது. அரசியல் சட்டத் திருத்தம் உருவாக காரணமான இயக்கம் திராவிட இயக்கம். அத்தகைய இடஒதுக்கீடு, சமூக நீதிக்குஆபத்தை உருவாக்கும் கட்சி பாஜக. ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் முன்னேறுவதை காலம்காலமாக தடுத்தவர்கள், இப்போதும் தடுக்கிறார்கள்.

அதற்கு குலக்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் புதிய கல்விக் கொள்கை, ஏழை, எளியவர்களை படிப்பதை பறிக்க நீட் தேர்வு, மத்திய அரசுப் பணிகளில் தமிழ் புறக்கணிப்பு, இந்தி, சம்ஸ்கிருதம் திணிப்பு என நமது பிள்ளைகளின் வேலைவாய்ப்புகளை பறிக்கின்றனர். நாம் முன்னேறுவதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சிறுபான்மை மக்களுக்கு மட்டுமல்ல, பெரும்பான்மை மக்களுக்கும் எதிரி பாஜக.

தமிழ்நாட்டுக்கு, தமிழக மக்களுக்கு துரோகம் செய்வதை வழக்கமாக்கி கொண்டுள்ளார் பிரதமர் மோடி. ஆனால், வாக்கு கேட்க மட்டும் தமிழகம் வருகிறார். தேர்தல் வந்துவிட்டால் மக்கள் மீது அவருக்கு கரிசனம் வரும். அதனால்தான் தற்போது சிலிண்டர், பெட்ரோல் விலையை குறைத்துள்ளார்.

பிரதமரின் தேர்தல் நாடகங்களை மக்கள் புரிந்துவைத்துள்ளதால் யாரும் அவரை நம்பவில்லை. அதனால், மக்களை நம்பவைக்க ‘மோடியின் கேரன்ட்டி’ என விளம்பரம் செய்கிறார். அவரது வாக்குக்கு கேரன்ட்டியும் இல்லை. வாரன்ட்டியும் இல்லை.

அப்படிப்பட்ட பிரதமர், ஆளுநர் பாஜக பற்றி முன்னாள் முதல்வர் பழனிசாமி பேசுவதே இல்லை. தமிழகத்தை வஞ்சித்த பாஜகவையும், பாழ்படுத்திய அதிமுகவையும் ஒருசேர வீழ்த்த வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.