லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமான காமெடி நடிகர் சேசு காலமானார். அவருக்கு வயது 60. மாரடைப்பு ஏற்பட்டு சமீபத்தில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சேசு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். அவரது மறைவு திரையுலகத்திற்கு மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தனுஷ் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தில் சினிமாவில் அறிமுகமான சேசு விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் உலகளவில் பிரபலமானார்.

நடிகர் சந்தானம் அந்த நிகழ்ச்சியில் இருந்து சேசுவுடன் பணியாற்றி வரும் நிலையில், தனது பல படங்களில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளை கொடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது. 

சந்தானம் நடிப்பில் கடந்த மாதம் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் மெட்ராஸ் ஐ நோயை ஊருக்குள் கொண்டு வந்து அனைவரையும் ஆத்தா கண்ணை குத்திட்டா என சந்தானம் நம்ப வைத்திருப்பார். அந்த காட்சியில் நடித்து கலக்கியிருப்பார் சேசு. இவருக்கும் நிழல்கள் ரவிக்கும் இடையே நடக்கும் அந்த காட்சியெல்லாம் ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது குறிப்பிடத்தக்கது. கடைசியில் சலங்கை கட்டிக் கொண்டு இவர் ஆடும் காட்சிகளும் ரசிகர்களை சிரிக்க வைத்தன

இந்நிலையில் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சேசு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது பலரையும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.