தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்த்தை வைத்து தலைவர் 171 படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மார்ச் அல்லது ஏப்ரலில் ஷூட்டிங் ஆரம்பமாகும் என லோகேஷ் தெரிவித்திருக்கிறார். லியோ படத்தில் சந்தித்த விமர்சனங்களை கண்டிப்பாக தலைவர் 171ல் சரி செய்வார் என்று நம்பப்படுகிறது. ரஜினி படத்துக்கான பணிகளையும் தொடங்கியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

இயக்கத்தில் மட்டும் கவனம் செலுத்திவந்த லோகேஷ் கனகராஜ் நடிப்பிலும் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். அதன்படி ஆர்.ஜே.பாலாஜி நடித்த சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் தோன்றியிருந்த அவர், அன்பறிவ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார் என்று கூறப்பட்டது. ஆனால் அதில் லோகேஷ் கனகராஜ் நடிப்பதற்கு வாய்ப்புகள் கம்மி என்று தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன. சூழல் இப்படி இருக்க லோகேஷ் கனகராஜ் ஹீரோவாகிறார்.

ஆனால் படத்தில் அல்ல ஒரு ஆல்பத்தில். கமல் ஹாசனின் மகளும், பாடகியும், நடிகையுமான ஸ்ருதிஹாசன் இனிமேல் என்ற சுயாதீன பாடலை உருவாக்கியிருக்கிறார். அவரே இசையமைத்து பாடியிருக்கும் அந்தப் பாடலை கமல் ஹாசன் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலில்தான் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக களமிறங்குகிறார். அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வீடியோவில் கமல் ஹாசன், லோகேஷ் கனகராஜ், ஸ்ருதிஹாசன் ஆகிய மூன்று பேரும் தோன்றியிருக்கிறார்கள். இப்பாடலை கமல் ஹாசன் எழுதுவதோடு மட்டுமின்றி தயாரிக்கவும் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.