அதிஸ்திரேலியாவில் இருந்து ஆக்லாந்திற்கு பயணித்த விமானம் ஒன்று நடுவானில் பறந்துகொண்டிருக்கும்போது திடீரென கீழ் நோக்கி பாய்ந்ததால் பயணிகள் நிலைகுழைந்து விமானத்திற்கு முட்டி மோதியதில் 50 பேர் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சிட்னி நகரில் இருந்து ஆக்லாந்து நோக்கி, சிலி நாட்டின் லாதம் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று (11) புறப்பட்டது. விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென அதன் உயரம் குறைந்து, கீழ்நோக்கி பாய்ந்தது.

இதனால் பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் நிலைகுலைந்து அங்குமிங்கும் முட்டி மோதினர். சிலர் சீலிங்கில் மோதினர். குறிப்பாக, சீட்பெல்ட் அணியாமல் இருந்த பயணிகள், அவர்களின் இருக்கையில் இருந்து தூக்கி வீசப்பட்டு சீலிங்கில் முட்டி மோதினர்.

எதிர்பாராமல் நடந்த இச் சம்பவத்தால் சுமார் 50 பயணிகள் காயமடைந்துள்ளதாகவும், பின்னர் சில நிமிடங்களில் நிலைமை சீரானதாக தெரிவித்தனர். குறித்த சம்பவத்தில் லேசான காயமடைந்த பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பலத்த காயமடைந்த பயணிகள் ஆம்புலன்ஸ்கள் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஒரு பயணியின் உடல்நிலை மட்டும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொழில்நுட்ப பின்னடைவு காரணமாக விமானம் இவ்வாறு திடீரென கட்டுப்பாட்டை இழந்து சென்றதாக விமான நிறுவனம் கூறியிருக்கிறது.