“வணங்கான் படப்பிடிப்பின்போது இயக்குநர் பாலா அடித்ததால் படத்திலிருந்து விலகினேன்” என நடிகை மமிதா பைஜு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மலையாள யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “வணங்கான் படத்தில் முதலில் நான் ஒப்பந்தமாகியிருந்தேன். அப்படத்தில் ‘வில்லடிச்சா மாடன்’ என்றொரு கலை இருந்தது. அதற்கு பாடிக்கொண்டே ஆடவேண்டும். இதில் எனக்கு எந்த அனுபவமும் இல்லை. ஆனால், படத்தில் அனுபவம் வாய்ந்த கதாபாத்திரம் இதை செய்வது போல சித்தரிக்கப்படுகிறது. இதை எப்படி செய்வது என்பது குறித்து இயக்குநர் பாலா, அந்தக் கலையில் தேர்ந்த பெண்ணிடம் செய்து காட்டும்படி கூறினார்.

அவர் முடித்ததும், உடனே பாலா ஓகே நாம் இப்போது டேக் போகிறோம் என்றார். நான் அதிர்ச்சியடைந்துவிட்டேன். நான் அதற்கு தயாராக இருக்கவில்லை. அவர்கள் என்ன பாடுகிறார்கள் என்பது கூட எனக்குத் தெரியவில்லை. அதைக் கற்றுக்கொள்ள எனக்கு நேரம் தேவைப்பட்டது. 3 டேக்குகள் எடுத்தேன். அப்போது அவர் நிறைய திட்டினார். முன்னதாக, ‘நான் அவ்வபோது திட்டுவேன், பெரிதாக எடுத்துக்கொள்ளாதீங்க’ என அவரே (இயக்குநர் பாலா) சொல்லியிருந்தார்.

இருந்தாலும், அந்த நேரத்தில் அவரின் திட்டு என்னை காயப்படுத்தியது. படப்பிடிப்பில் அதற்காக நான் மனதளவிலேயே தயாராகி வருவேன். அவர் என்னை முதுகில் அடிக்கவும் செய்தார். நடிகர் சூர்யா, ஏற்கெனவே பாலாவுடன் படம் பண்ணியிருப்பதால் அவர் எப்படியென தெரிந்துவைத்திருந்தார். புதிதாக இணைந்ததால் எனக்குத்தான் தெரியவில்லை. இத்தகைய அனுபவம் தான் என்னை ‘வணங்கான்’ படத்திலிருந்து வெளியேறச் செய்தது” என்றார்.

சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி பெருவெற்றி பெற்ற ‘பிரேமலு’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் மமிதா பைஜு என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ‘வணங்கான்’ படத்திலிருந்து நடிகர் சூர்யாவும் விலகியது கவனிக்கத்தக்கது.