சென்னையில், முதல் முறையாக காமிக் கான் நிகழ்ச்சி, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இதில், ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ அமிர்தராஜ் எழுதிய கிராபிக்ஸ் காமிக் நாவலான ‘எண்ட் வார்ஸின்’ தமிழ்ப் பதிப்பு 'இறுதிப்போர்', வெளியிடப்பட்டது. பாடலாசிரியர் மதன் கார்க்கி தமிழாக்கம் செய்துள்ள இந்நாவலை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார்.

அவர் பேசும்போது, 'எனக்குச் சிறுவயதில் இருந்தே காமிக் புத்தகங்கள் பிடிக்கும். ஆங்கிலத்தில் இதுபோன்ற நாவல்கள் அதிகம். தமிழில் எனக்குத் தெரிந்து இரும்புக் கை மாயாவி போல சிலதான் இருந்தன. இந்தப் புத்தகமும் தரமானதாக இருக்கும்' என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லோகேஷ் கனகராஜ், "இரும்புக்கை மாயாவி என் கனவு படம். அது பெரிய படம். அதற்கு நாட்கள் ஆகும். இப்போது இருக்கிற படங்களை முடித்துவிட்டு அதை இயக்குவேன்.

லியோ 2- படம் உருவாக அனைத்து சாத்தியங்களும் இருக்கின்றன. அதற்கான நேர காலம் அமைய வேண்டும். விஜய்யின் லட்சியம் வேறு எங்கோ இருக்கிறது. அவருக்கு வாழ்த்துகள். ரஜினியின் 171-வது படத்துக்கான ஸ்கிரிப்ட் எழுதிக் கொண்டிருக்கிறேன். படப்பிடிப்புக்கு இன்னும் 3 மாதங்கள் இருக்கின்றன. அதனால் வெளியில் கூட வருவதில்லை. ஒன்றரை மாதமாக ஃபோனையும் பயன்படுத்தவில்லை. இவ்வாறு லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.