இந்தியா: தமிழ்நாடு

மக்களவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் வரவுள்ள நிலையில் தமிழக அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. 2026-ல் வரவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தனது தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க பாமக திட்டமிட்டுள்ளது.

அதற்கான வியூகங்களை கட்சியின் நிறுவனர் ராமதாஸும், தலைவர் அன்புமணியும் வகுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அதனால், இந்த மக்களவைத் தேர்தலை மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து சந்திக்க பாமக முடிவு செய்துள்ளது. அதன்படி, பாஜக மற்றும் அதிமுகவுடன் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் பாமக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இதுதொடர்பாக நேற்று சென்னையில் பாமக தலைவர் அன்புமணி செய்தியாளர்களிடம் கூறும்போது, “கூட்டணி தொடர்பாக சில கட்சிகளுடன் பேசி வருகிறோம். தற்போது வரை யாருடனும் கூட்டணி உறுதியாகவில்லை. கூட்டணி தொடர்பான பாமகவின் நிலைப்பாட்டை விரைவில் தெரிவிக்க இருக்கிறோம்.

கட்சியின் நிறுவனர் ராமதாஸை, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சந்தித்தது என்பது மரியாதை நிமிர்த்தமான சந்திப்பு. அந்த சந்திப்பின் போது அரசியல் எதுவும் பேசவில்லை” என்றார்.