ஐ.பி.எல் 2024 தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 19 ஆம் திகதி துபாயில் நடந்திருந்தது. இந்த மினி ஏலத்தில் வீரர் ஒருவரை ஏலத்தில் எடுத்துவிட்டு, நாங்கள் தவறான வீரரை ஏலத்தில் எடுத்துவிட்டோம் என பஞ்சாப் கிங்ஸ் பின்வாங்க முயன்ற சம்பவம் சுவாரஸ்யத்தைக் கிளப்பியிருக்கிறது.

இந்த மினி ஏலத்தில் ஹர்ஷல் படேல், கிறிஸ் வோக்ஸ், ரிலே ரூஸோ ஆகியோரை பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்திருந்தது. எல்லா அணிகளும் போதுமான வீரர்களை எடுத்துக் கொண்ட நிலையில் ஏலத்தை வேகப்படுத்தும் நடைமுறை நடந்தது. அதன்படி, அணிகள் தங்களுக்கு தேவையான வீரர்களின் பெயரை எழுதிக் கொடுக்க அவர்கள் மட்டும் ஏலம் விடப்பட்டனர். அப்போதுதான் சஷாங் சிங் எனும் உள்ளூர் வீரர் அடிப்படை விலையான 20 லட்சத்திற்கு அறிவிக்கப்பட்டார். உடனே பஞ்சாப் அணி அவரை அதே விலைக்கு வாங்கவும் செய்தது. ஆனால், அவரை வாங்கியவுடனே பஞ்சாப் மேசைக்குள் சலசலப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து நாங்கள் வாங்க வேண்டிய வீரருக்கு மாற்றாக வேறு வீரரை எடுத்துவிட்டோம் என ஏலத்தை நடத்திய மல்லிகா சாகரிடம் முறையிட்டனர். ஏலம் அறிவிக்கப்பட்டு வீரர் விற்கப்பட்டு விட்டதால் இனிமேல் எதுவும் மாற்ற முடியாது என மல்லிகா கூறிவிட்டார்.

இது சம்பந்தமாக பஞ்சாப் கிங்ஸ் அணி ட்விட்டரில் விளக்கமும் அளித்திருக்கிறது. அதில், 'நாங்கள் சில விஷயங்களை விளக்க விரும்புகிறோம். சஷாங் சிங் எங்களின் விருப்பப்பட்டியலில் இருக்கவே செய்தார். ஒரே பெயருடன் இரண்டு வீரர்கள் இருந்ததே குழப்பத்திற்கு காரணம். நாங்கள் எடுக்க நினைத்த வீரரை சரியாகத்தான் எடுத்திருக்கிறோம். அவர் சில சிறப்பான செயல்பாடுகளை செய்திருக்கிறார்.

சஷாங்கை அணியில் எடுத்ததில் மகிழ்வடைகிறோம். அணியின் வெற்றியில் அவர் பங்களிப்பு செய்வதை பார்க்க ஆர்வமாக இருக்கிறோம்.' என பஞ்சாப் அணி விளக்கமளித்திருக்கிறது.