துருக்கியில் உள்ளூர் நேரப்படி நேற்று அதிகாலை 4.17 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் காஸியான்டெப் நகருக்கு அருகே 17.9 கிமீ ஆழத்தில் உருவானது.

இதனால் சிரியா எல்லையை ஒட்டியுள்ள கஹ்ரமன்மரஸ் மற்றும் காஸியான்டெப் நகரங்களுக்கு இடையே உள்ள பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து மீட்பு பணிகளில் ராணுவத்தினரும், விமானப்படையினரும் களமிறக்கப்படடுள்ளனர்.

முதலில் சுமார் 100 பேர் சடலங்களாக மீட்கப்பட்ட நிலையில், மோசமான வானிலை காரணமாக மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்பட்டது

பனியும், மழையும் சேர்ந்து பெய்து வருவதால் முக்கிய நகரங்களுக்கான விமான சேவை இரத்து செய்யப்பட்டுள்ளது.

எனவே இங்கிருந்து மீட்பு பணிகளுக்கு வர இருந்த பேரிடர் மீட்பு படைகளின் வருகை தாமதமானது. இதனையடுத்து மீட்பு பணிகளுக்கு உதவ தயாராக இருப்பதாக இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட நாடுகள் முன்வந்தன.

இந்தியா சார்பில் 100 பேரை கொண்ட இரண்டு பேரிடர் மீட்பு குழுக்கள் துருக்கி பறந்துள்ளன.

அதேபோல அமெரிக்காவும், இங்கிலாந்தும் தங்களது பேரிடர் மீட்பு படையை துருக்கிக்கு அனுப்பி வைத்தது.

வானிலை ஒரளவு சீரான நிலையில் மீண்டும் மீட்பு பணிகள் சூடுபிடித்தன.

மீட்பு பணிகளை பொறுத்த அளவில் இந்தியா, அமெரிக்கா என மொத்தம் 45 நாடுகளை சேர்ந்த வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கத்தில் சிக்கி இதுரை 4,000 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்றும், எனவே உயிரிழப்பு எண்ணிக்கை எட்டு மடங்காக அதிகரிக்கும் எனவும் உலக சுகாதார அமைப்பின் மூத்த அவசரநிலை அதிகாரி கேத்தரின் ஸ்மால்வுட் கூறியுள்ளார்.

இந்த நிலநடுக்கத்தையடுத்து அடுத்த 8 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என துருக்கி அரசு அறிவித்திருக்கிறது.