இந்தியா: தமிழ்நாடு

குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அடிப்படையாக கொண்டு பிபிசி செய்தி ஊடகம் சமீபத்தில் 'India: The Modi Question' எனும் ஆவணப்படத்தை இயக்கியுள்ளது.

இந்த ஆவணப்படத்தில் உண்மைக்கு மாறான தகவல்கள் சித்தரிக்கப்பட்டுள்தாக மத்திய அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதோடு இந்த ஆவணப்படம் தற்போது நாடு முழுக்க தடை செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே இதை பல்வேறு அமைப்புகள் நாடு முழுக்க தடையை மீறி திரையிட்டு வருகின்றன.

இந்நிலையில் தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இந்த ஆவணப்படத்தை தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

நேற்று சென்னை அம்பேத்கர் திடலில் 'இந்தியா: மோடி என்கிற கேள்வி' என்ற பெயரில் பிபிசி ஆவணப்படத்தை திருமாவளவன் தமிழில் வெளியிட்டார்.

இந்த ஆவணப்பட விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் எம்பி திருமாவளவன் இந்த ஆவணப்படம் குறித்து பேசினார்.

மேலும் தமிழ்நாட்டில் திமுகவை எதிர்க்க கூடாது, திமுகவை எதிர்ப்பது ஏன் தவறு என்பது தொடர்பாகவும் அவர் பேசினார்.

அவர் இதன்போது கூறியதாவது...

தமிழ் தேசியம் என்பது சனாதனத்தை எதிர்க்க வேண்டும்.

குஜராத்தில் நடந்த கலவரத்தை பற்றி தமிழ் தேசியமும் பேச வேண்டும். மத வாதமே அவர்களின் முக்கிய எதிர்ப்பாக இருக்க வேண்டும். அவர்களின் முக்கிய குறிக்கோள், கொள்கை அதுவாகவே இருக்க வேண்டும். ஆனால் திமுகவை எதிர்த்துக்கொண்டு இருக்கிறார்கள். தமிழ் மண்ணிலேயே திசை திருப்பும், திருப்புவாதத்தை எதிர்க்க வேண்டும். பெரியாரியத்தை எதிர்ப்பது தமிழ் தேசியம் அல்ல. சனாதனத்தை எதிர்ப்பதுதான் தமிழ் தேசியம். இந்துத்துவ கொள்கையை இவர்கள் எதிர்க்க வேண்டும்.

ஆனால் அதை விடுத்து இவர்கள் திரிபுவாதம் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். திமுக, திகவை எதிர்ப்பதன் மூலம் இவர்கள் சனாதன அரசியலுக்கு துணை சென்று கொண்டு இருக்கிறார்கள்.

இது மிகவும் ஆபத்தான அரசியல். திமுகவை எதிர்ப்பது சனாதன சக்திகளுக்கு துணைபோக கூடிய அரசியல். அதை இவர்கள் கைவிட வேண்டும் என்று விசிக தலைவர் எம்பி திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சீமானின் நாம் தமிழர் கட்சி திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து, தமிழ் தேசிய அரசியல் பேசி வரும் நிலையில்தான் திருமாவளவன் இந்த விமர்சனத்தை வைத்து இருக்கிறார்.