மன்னார்குடியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துவது பற்றிய கேள்விக்கு பதிலளித்த போது என்னை எல்லாம் யாராலும் எதுவும் செய்ய முடியாது. என் நிழலை கூட அவர்களால் நெருங்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

சசிகலா தொடர்ந்து பேசுகையில்..

அரசால் என்ன செய்ய முடியுமோ அதைத்தான் நாங்கள் வாக்குறுதியாகக் கொடுப்போம்.

கடந்த தேர்தலின்போது 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்று ஒரு பெட்டி நிறைய மனுக்களை வாங்கி, பூட்டி, சாவி என்னிடம் இருக்கும், ஆட்சிக்கு வந்ததும் இதனை திறந்து குறைகளை தீர்ப்பேன் எனக் கூறினார்.

ஆனால், இன்னும் அந்தப் பெட்டி திறக்கப்படவே இல்லை. நான் நினைக்கிறேன் சாவி தொலைந்து போய்விட்டது போல. சாவி இருந்திருந்தால் இந்நேரம் திறந்திருப்பார்கள் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் அதிமுக பிளவுபட்டு போனதற்கு பாஜகதான் காரணமா என்ற கேள்விக்கு பதில் அளித்த சசிகலா, 'நான் ஒன்றை மட்டும் சொல்கிறேன். நாம் சரியாக இருந்தால் அடுத்தவர்களைக் குறை சொல்லத் தேவையில்லை. நாம் என்ன ஒரு மாத கைக்குழந்தையா நம்மை அவர்கள் கட்டுப்படுத்தவும், ஏமாற்றுவதற்கும்? நாம் சரியாக இல்லாமல் இன்னொரு கட்சியை குறை சொல்வது நாம் போகாத ஊருக்கு வழி சொல்வது போல இருக்கிறது.

என் நிழலை கூட அவர்களால் நெருங்க முடியாது. இரட்டை இலை சின்னத்தை எந்த காலத்திலும் யாரும் எதுவும் செய்ய முடியாது.

நான் உயிருடன் இருக்கும் வரை இரட்டை இலை சின்னத்திற்கு ஆபத்து வர விட மாட்டேன். சில பேரை இப்போது எடை போட்டுக் கொண்டிருக்கிறேன்' எனத் தெரிவித்தார்.

ஈபிஎஸ், ஓபிஎஸ் இரு தரப்பினரும் மாற்றி மாற்றி விமர்சித்து வருவது பற்றிப் பேசிய சசிகலா, 'இவர்கள் பேசுவதை எல்லாம் பார்க்கும்போது, அது திமுகவுக்கு உதவுவதாகவே இருக்கிறது.

எனவே ஒருத்தரை ஒருத்தர் திட்டுவதை விட்டுவிட்டு, ஒழுங்காக இணைந்து, தீய சக்தி திமுகவை வீழ்த்த கைகோர்க்க வேண்டும் என்பதுதான் எனது வேண்டுகோள், எங்கள் கட்சித் தொண்டர்களின் வேண்டுகோள்.' எனத் தெரிவித்தார்.