உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அடுத்த வாரம் நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் உரையாற்றுவார் என்று பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன்படி அதிபர் ஜெலென்ஸ்கி டிசம்பர் 14 ஆம் திகதி புதன்கிழமை காலை 8 மணிக்கு வீடியோ இணைப்பு மூலம் பிரதிநிதிகள் சபையில் உரையாற்றுவார் என‌ அவர் தெரிவித்தார்.

"உக்ரைன் மக்கள் மற்றும் அதன் இறையாண்மை மீதான ரஷ்யாவின் சட்டவிரோத தாக்குதலை நியூசிலாந்து கண்டிப்பதில் சந்தேகத்திற்கு இடமின்றி உள்ளது" என்று பிரதமர் ஆர்டெர்ன் இன்று மாலை ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த உரை "உக்ரைனுக்கான எங்கள் ஆதரவை நேரடியாக அதிபர் ஜெலென்ஸ்கிக்கு மீண்டும் வலியுறுத்துவதற்கும், அதன் மக்களுக்கும் அதன் இறையாண்மைக்கும் தொடர்ந்து ஆதரவளிக்க சர்வதேச சமூகம் என்ன செய்ய முடியும் என்பதை அவரிடம் கேட்கவும் ஒரு மதிப்புமிக்க வாய்ப்பு" என்று பிரதமர் ஆர்டெர்ன் தெரிவித்தார்.

இதனிடையே நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் உலகத் தலைவர் ஒருவர் உரையாற்றிய இரண்டாவது உரையாக அதிபர் ஜெலென்ஸ்கியின் உரை அமையும்.

முன்னதாக ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் ஜூலியா கில்லார்ட் 2011 ஆம் ஆண்டு நியூசிலாந்து பாராளுமன்றத்தில் உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.