தென் கொரியாவில் இருந்து வட கொரியாவுக்கு கண்காணிப்பு தீவிரமாக உள்ள பகுதி வழியாக சமீபத்தில் ஒருவர் சென்றது குறித்து தென் கொரிய அரசு விளக்கம் அளித்துள்ளது.

கிழக்காசிய நாடுகளான வடக்கு மற்றும் தென் கொரியாவை 248 கி.மீ., துாரம், 4 கி.மீ., அகலமுள்ள எல்லைப் பகுதி பிரிக்கிறது.

மிக தீவிர கண்காணிப்பு உள்ள, கண்ணி வெடிகள் புதைக்கப்பட்ட இந்தப் பகுதி வழியாக எல்லையைத் தாண்டிச் செல்வதற்கு யாருக்கும் அனுமதி கிடையாது.

கடந்த 1990களில் இருந்து வட கொரியாவில் இருந்து 34 ஆயிரம் பேர் தென் கொரியாவுக்கு புலம் பெயர்ந்துள்ளனர்.

அதில் 30 பேர் மட்டுமே கடந்த10 ஆண்டுகளில் வட கொரியாவுக்கு திரும்பியுள்ளனர்.

கொரோனாவைக் கட்டுப்படுத்த தன் எல்லைகளை வடகொரியா முழுமையாக மூடியுள்ளது.

இந்நிலையில் கடந்த 1 ஆம் திகதி தென் கொரியாவில் இருந்து எல்லைப் பகுதி வழியாக ஒருவர் வட கொரியாவுக்கு சென்றது  கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளது.

இது குறித்து தென் கொரியா அதிகாரிகள் கூறியுள்ளதாவது..

கடந்த 2020 இல் வட கொரியாவில் இருந்து இதே எல்லைப் பகுதி வழியாக ஒருவர் தென் கொரியாவுக்கு தப்பி வந்தார். வட கொரியாவில் தன்னால் இனி வாழ முடியாது என அப்போது அவர் கூறினார்.

இந்நிலையில் தற்போது வட கொரியாவை கைவிட்டு வந்த அந்த நபர், தற்போது மீண்டும் வடகொரியாவுக்கே சென்றுள்ளார்.

அவரது உயிருக்கு அங்கு ஆபத்து உள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.