ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்  ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையிலான அரசியல் கூட்டு தொடர்பில் தற்போது திரைமறைவில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் ரணில் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாகவும்  இதற்கு வெளிநாட்டு இராஜதந்திர அலுவலகங்கள் சில ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாகவும் தெரிய வருகிறது.

நாட்டை பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீட்டெ டுப்பது மற்றும் வெளிநாடுகளின் அழுத்தங்களில் இருந்து தப்பித்துக் கொள்வது போன்ற விடயங்களில் ரணில் விக்ரமசிங்கவின் திறமை மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரத் தொடர்புகளைப் பெற்றுக் கொள்ள ஜனாதிபதி தரப்பு எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த அரசியல் கூட்டின் போது ரணில் விக்ரமசிங்கவுடன் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து கொள்வார்கள் எனவும் ரணிலுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்படலாம் என்றும் அரசியல் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.

சஜித் பிரேமதாஸ அணியை வீழ்த்தும் நோக்கில் உள்ள ரணில், கோட்டா தரப்புடன் இணைந்து 'எதிரிக்கு எதிரி நண்பன்' என்ற பொது அரசியல் தந்திரத்தை கையாள திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.