உலகில் எப்போதும் கொதித்துக் கொண்டிருக்கும் எரிமலைகளில் ஒன்றான ஹவாய் தீவின் கிலாயுயா (Kilauea) எரிமலை, இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும்  வெடித்து லாவா எனப்படும் தீக்குழம்பை கக்கி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனால் எரிமலையின் வாய் பகுதியில் 134 மீற்றர் ஆழத்திற்கு தீப்பிழம்பால் ஆன ஏரி உருவாகி ஒரு மணி நேரத்திற்கு ஒரு மீற்றர் உயரம் என்ற அளவுக்கு தீக்குழம்பு உயர்ந்து வருவதாக கூறப்படுகின்றது.

ஞாயிறு இரவு வெடிக்க ஆரம்பித்ததிலிருந்து இதுவரை 200 கோடி கலன்கள் அளவுக்கு இந்த எரிமலை தீக்குழம்பை வெளியிட்டுள்ளது.

33 ஏக்கர் பரப்பளவை ஆக்கிரமிக்கும் அளவுக்கு இது இருந்தாலும், தீக்குழம்பு அதன் ஆழமான வாய்ப்பகுதியிலேயே தங்கியுள்ளது. 2018 ஆம் ஆண்டு  இந்த எரிமலை வெடித்த போது அதன் லாவா 700 வீடுகளை மூழ்கடித்தது.

இப்பொது அது போன்ற அபாயம் எதுவும் இல்லை. ஆனால் எரிமலை வாயுக்கள், பாறை வெடிப்புகள் உள்ளிட்டவை ஏற்படலாம் என மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த எரிமலை கடந்த 100 ஆண்டுகளில் 50 முறை வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.