கொரோனாவுக்கு சிகிச்சை என்று கூறப்படும் ஆயுர்வேத மருந்து மக்களை தவறாக வழிநடத்தும் நாடகமாக மாறிவிடக்கூடாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க வலியுறுத்தல் விடுத்துள்ளார்.

 

அங்கீகரிக்கப்பட்ட ஆயுர்வேத மருத்துவ அமைப்பின், முறையான பரிசோதனையின் பின்னரே கொரோனாவுக்கு மருந்தை அங்கீகரிக்க வேண்டும்.

 

அதன்படி இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சையை ஒழுங்குபடுத்துவதற்கு ஒரு அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு உள்ளது. எனவே அந்த அமைப்பு மருந்தை பரிசோதிக்க வேண்டும். பின்னர் ஒரு நாடகத்தை உருவாக்குவதற்கு பதிலாக விநியோகத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று ரணவக்க கேட்டுக்கொண்டார்.

 

வெளிநாட்டினரை ஈர்க்க வானூர்தி நிலையங்கள் திறக்கப்படுவதுடன், மருத்துவ சுற்றுலாவும் ஊக்குவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

அந்நிலையில் இவ்வாறான ஆபத்தான விடயங்களை முன்னெடுப்பது அவசியமற்றது. சில தசாப்தங்களுக்கு முன்னர் 1956 சூரிய கிரகணத்தின் போது ‘வடகசுதியா ’என்ற மருத்துவ பானத்தை உட்கொள்வதன் மூலம் மக்கள் உடல் தோற்றத்தை மேம்படுத்த முடியும் என்றுக் கூறி அந்த மருந்து ஊக்குவிக்கப்பட்டது.

 

இருப்பினும் பலர் இந்த பானத்தை உட்கொண்ட பின்னர் மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டியேற்பட்டதாக ரணவக்க நினைவூட்டினார்.

 

மேலும் ,கொரோனா சிகிச்சையை உள்ளூரில் ஊக்குவிக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் கொரோனாவின் விளைவாக இலங்கையில் 0.5 சத விகித இறப்புகள் மட்டுமே பதிவாகியுள்ளன.