திருகோணமலை - மஹதிவுல்வெவ பகுதியில் வீடுகளை உடைத்து களவாடிய குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபரொருவரை கைது செய்துள்ள நிலையில் திருடிய பொருட்களை வாங்கி  தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இரண்டு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம்  நேற்றிரவு இடம் பெற்றுள்ளது.

மஹதிவுல்வெவ - சுவர்ண ஜெயந்திபுர பகுதியில் உள்ள வீடொன்றினை  உடைத்து பொருட்களை திருடிய குற்றச்சாட்டின் பேரில் அதே பகுதியைச் சேர்ந்த பிரசாத் சதுரங்க (27 வயது) என்பவரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் வீட்டினை உடைத்த சந்தேக நபரை விசாரணை செய்தபோது இன்னுமொரு வீட்டை உடைத்து வீட்டிலிருந்த உலர் உணவுப் பொருட்களை திருடி விற்பனை செய்ததாகவும் வீட்டில் இருந்தவர்கள் மரண வீடொன்றுக்கு சென்ற போதே இந்த வீட்டை  உடைத்ததாகவும் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர் வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த நபரிடம் திருடிய பொருட்களை வாங்கி வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இரண்டு சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாகவும் அவர்களிடமிருந்து குளிர்சாதனைப்பெட்டி,வானொலிப் பெட்டி (பொக்ஸ்) மற்றும் கேஸ் சிலிண்டர் போன்றவைகள் கைப்பற்றப்பட்டதாகவும் திருடிய பொருட்களை வாங்கி தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் அதே பகுதியைச் சேர்ந்த முதித பிரசன்ன விஜேரத்ன ( 27 வயது) எச்.ஏ.பியசேன (51வயது) ஆகியோரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்களை இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.