வாசித்தல் எழுதுதல் என்பது எந்த ஒரு மொழிக்கும் இன்றியமையாத ஒன்று. ஒரு மொழியை குழந்தைகள் சிறு வயதிலிருந்தே தெளிவாகப் பேசவும், எழுதிப் படிக்கவும் அறிந்து கொள்ள வேண்டும். சான் ஆண்டோனியோவில் வாழும் குழந்தைகளுக்கு நம் தாய் மொழியாம் தமிழ் மொழியை கற்பித்து தன்னார்வம் கொண்ட ஆசிரியர்களால் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது தமிழ்ப் பள்ளி. 

இயல்-இசை- நாடகம் 

இங்கே கடந்த மார்ச் 30 2024 அன்று குழந்தைகளின் திறமையை வெளிக்காட்டும் வகையில் அவர்கள் வகுப்பிற்கேற்ப பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன . குழந்தைகள் மிகுந்த ஆர்வமுடன் கலந்து கொண்டனர். முதலாம் வகுப்பு குழந்தைகள் தங்கள் தமிழ்த்  திறமையை திருக்குறள் , ஆத்திச்சூடி போன்ற செய்யுள்களை சொல்லியும்,  பாரதியின் பாடல்களைப் பாடியும், அறுசுவை , ஐம்புலன்கள் பற்றிப் பேசியும், நடித்துக் காண்பித்தும் வெளிப்படுத்தினர். அதில் பொம்மலாட்டம் வழியில் இரு குழந்தைகள் பாட்டி வடை சுட்ட கதையை அரங்கேற்றியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. 

பிறகு ஆண்டுதோறும் நடக்கும் நாடக போட்டி திருமதி.ஷீலா ரமணன் மற்றும் திரு. குமாரசாமி ஐயா அவர்கள் நீதிபதியாக அமர மொத்தம் நான்கு நாடகங்கள் நடைபெற்றன. 

முதல் நாடகமாக தமிழ் மொழியும் வள்ளுவமும் என்ற தலைப்பில் திருக்குறளில் இருந்து “எண்ணென்ப ஏனை எழுத்தென்ப” குறளை வைத்து,  அண்ணன் தம்பி இருவரில் , தம்பி  படிப்பின் முக்கியத்துவத்தை அண்ணனுக்கு எவ்வாறு வெளிப்படுத்துகிறான் என்பதையும் , “அன்பிலார் எல்லாம் தமக்குரியர்” என்ற குறளை  எடுத்து காட்டாக வைத்து , ஒரு சிறு பெண் தன் நண்பர்களுடன் எவ்வாறு அன்பைப் பகிர்ந்து நடந்து கொள்ள வேண்டும் என்பதை அழகாக நடித்துக் காண்பித்தனர். முடிவில் தமிழ் மொழியின் புகழ் பாடி திருக்குறள் உலகப் பொதுமறை மட்டுமல்ல வேற்று கிரக வாசிகளும் தங்கள் இடத்திற்கு எடுத்துச் சென்று பின்பற்றுவோம் என்று நடித்து முடித்தனர் . இந்நாடகத்தில் திருக்குறளின் பெருமை, சமத்துவம் ஆகியவற்றின் முக்கியத்துவம் பறைசாற்றப்பட்டது .

இரண்டாவதாக நட்சத்திர வாசிகளும் நம் தமிழ்நாடும் என்ற தலைப்பில் நடந்தேறிய நாடகம் அனைவரின் பார்வையையும் ஈர்த்தது. வேற்று கிரக வாசிகள் எவரேனும் தமிழகம் வந்தால் நம்மிடமிருந்து என்ன கற்றுக் கொள்வார்கள் என்பதை  கற்பனை நயத்தோடு வசனம் எழுதி, காட்சி அமைத்து, அதற்கு ஏற்றார் போல் உடை அணிந்து காண்போர் வியக்கும் வண்ணம் குழந்தைகள் நடித்தனர். முக்கியமாக தமிழக மக்களின் விருந்தோம்பல் பண்பும் , சக மனிதர்கள் மட்டுமின்றி செல்லப்  பிராணிகளையும் எவ்வளவு நேசிக்கின்றனர் என்பதும் , நம் பாரம்பரிய உணவு உண்டு வாழ்ந்தால் உணவே மருந்து, மருந்தே உணவு என்று வாழலாம் என்று நடித்தது அனைவரையும் மகிழ்வித்தது.

மூன்றாவதாக நெற்றிக்கண் திறப்பின் குற்றம் குற்றமே என்ற தலைப்பில் திருவிளையாடல் நாடகம் நடந்தேறியது. அதில் சொக்கன், மன்னன் செண்பகப்பாண்டியன், புலவர் நக்கீரர், தருமி, அமைச்சர், தண்டோரா ஆகிய கதாபாத்திரத்தில் ஆறு குழந்தைகள் சிறப்பாக வசனத்தை ஏற்ற இறக்கத்துடன் பேசி , ஆடை அலங்காரம், சிகை  அலங்காரம் அனைத்தையும் செவ்வனே செய்து நம்மை திருவிளையாடல் நடந்தேறிய கயிலாயத்திற்கும் , பாண்டிய மன்னனின் அரசவைக்குமே அழைத்துச் சென்றனர். மன்னன் அறிவித்த ஆயிரம் பொன்னை தருமி தனக்கே கிடைக்க புலம்பும் காட்சி,  நக்கீரர் ஈசன் இறை என்று அறிந்தும் நெற்றிக்கண் திறப்பின் குற்றம் குற்றமே  என்றுரைப்பது அலாதியாக இருந்தது. அனைத்து வசனங்களும் தூய தமிழில் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது. 

அடுத்து நவீன திருவிளையாடல் என்ற நாடகம் இடம்பெற்றது . அதில் சிவபெருமான் , பார்வதி , முருகர் , விநாயகர் , நாரதர் , ஔவைபாட்டி ஆகிய வேடங்களில் நவீனமாக ஞானப்பழத்துக்கு பதில் ஐபேட் வேண்டும் என வாக்குவாதம் வர , உடனே போட்டியை அறிவிக்கின்றனர் . யார் முதலில் நூறு திருக்குறள்கள் படித்து வருகிறார்களோ அவருக்கே ஐபேட் என்று . விநாயகர் சற்றும் தாமதிக்காமல் தனது கைபேசியில் சிறி(Siri) செயலியை கேட்டு திருக்குறள் படித்து முடிக்கிறார்.முருகரோ நூலகம் சென்று பயிளும் வேலையில் , விநாயகர் குறள்களைக் கூறி  ஐபேட்'ஐ வாங்கிவிடுகிறார். அதனால் கோபம் அடைந்த முருகர் பழனி மலை சென்று விடுகிறார் . அங்கு வரும் ஔவைபாட்டி முருகரின் கோபம் தணிய பாடல் பாடி, அம்மை அப்பனிடம் கோபம் கொள்ளக் கூடாது என்றுரைக்க , இருவரும் கயிலாயம் செல்கின்றனர். அங்கே சிவன் முருகரிடம் மண்ணுலக அனுபவம் பற்றி கேட்க, முருகர் மக்கள் பிரச்சனைகளாக கைப்பேசிக்கு அடிமையாகவும்,வீட்டு உணவை விட வெளி உணவை அதிகம் சாப்பிடுவதும் , உடல் ஆரோக்கியம் இன்றியும்  தவிக்கிறார்கள் என்றுரைக்கிறார். இக்கதையில் தற்சமய மனித மாற்றங்களை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றார் போல் நகைச்சுவை கலந்த வசனம் எழுதி காண்போரை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்குமாறு கதை அமைத்திருந்தனர் .

இறுதியில் ஔவையே அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு சொல்ல கதையின் முடிவுரையாக அம்மை அப்பன் சொல்லை மதித்து நடக்க வேண்டும் , உணவோ, தொழில்நுட்பமோ  அளவாக இருத்தல் வேண்டும், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற தீர்வை பூலோக வாசிகள் தெளிந்து நடந்தால் நன்றாக வாழலாம் என்று நாடகம் இனிதே முடிவுற்றது.

அனைத்து நாடகங்களும் குறைந்தது மூன்றிலிருந்து நான்கு வாரங்கள் வசனம் எழுதியும் காட்சிகள் அமைத்தும் பயிற்சி கொடுத்தும் , பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் தங்கள் அன்றாட பணிகளுக்கு இடையில் குழந்தைகளின் தமிழ் ஆர்வத்தை தூண்டும் வகையில் இதற்காக செய்த அயராத உழைப்பு மிகவும் பாராட்டுக்குரியது.

பிரியங்கா குமார் - தமிழ் ஆசிரியை

செய்தி குறிப்பிலிருந்து நமது நிருபர் ஷீலா ரமணன்