இந்தியா: தமிழ்நாடு

மதுரை: “நான் பேசினால் மழை வரும் என்று சொன்ன தம்பி அண்ணாமலைக்கு ‘நோபல்’ பரிசு கொடுக்க வேண்டும்” என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கிண்டலாக தெரிவித்தார்.

இது குறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “தவறான வார்த்தையையோ, கொச்சையான வார்த்தைகளையோ நான் ஒருபோதும் உபயோகப்படுத்த மாட்டேன். எல்லோரும் என்னை தெர்மகோல் ராஜ், தெர்மகோல் ராஜ் என்று என்னை ட்ரெண்ட் செய்து கிண்டல் செய்தார்கள்.

ஆனால், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ‘நான் பேசினால் மழை வரும் என்று சொல்கிறார்’. அவருக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டாமா? அவரை ட்ரெண்ட் செய்ய வேண்டாமா? ஒருவர் பேசினால் மழை வரும் என்று சொன்னால், மழை வேண்டும் என்பதற்காக நான் போகும் இடமெல்லாம் பேசுவேன் அல்லவா?

தம்பி அண்ணாமலையும், பிரதமர் மோடியும் கச்சத்தீவை மீட்டெடுப்போம் என்று சொல்கிறார்கள். கடந்த 10 ஆண்டு காலம் இவர்கள் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு முன்பு 7 ஆண்டு பாஜக நாட்டை ஆட்சி செய்திருக்கிறது. அப்படியென்றால், அந்தக் காலங்களில் பாஜக ஆட்சியில் என்ன செய்து கொண்டு இருந்தார்கள். இப்போது தேர்தல் நேரத்தில் அதை பேச வேண்டிய அவசியம் என்ன என்றுதான் கேள்வி எழுப்பினேன். அதில் என்ன தவறு இருக்கிறது?” என்றார்.