இலங்கை

இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கான துறைமுகம் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரியை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்தவகையில், 10 சதவீத வரியை 6 சதவீதமாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், மார்ச் 29 ஆம் திகதி முதல் இந்த வரிக்குறைப்பு நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் கீழ் இறக்குமதி செய்யப்படும் சீமெந்து, ஆப்பிள் உள்ளிட்ட பழங்கள் மற்றும் குழந்தைகள் பால்மா ஆகியவற்றுக்கு விதிக்கப்படும் வரி 6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், பாடசாலை உபகரணங்கள், எழுதுபொருட்கள், ஆடைகளுக்கான மூலப்பொருட்கள், வாகன உதிரிபாகங்கள், மோட்டார் சைக்கிள், சைக்கிள் பாகங்கள் ஆகியவற்றுக்கான வரி 10 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், மருந்துகள், சத்திரசிகிச்சை உபகரணங்கள், மின்சார உபகரணங்கள், குளியலறை உபகரணங்கள், பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக், அலுமினியம் மற்றும் மரப் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரிகளை திருத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.