இந்தியா: தமிழ்நாடு

தேர்தல் சின்னம் விவகாரத்தில் பிரதமர் மோடி எழுதி கொடுப்பதைத் தான், தேர்தல் ஆணையம் அறிவிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டினார்.

இது தொடர்பாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என பேசியுள்ளார். கை சின்னம் ஆட்சிக்கு வர வேண்டும் என்பது ஜி.கே.வாசனின் உள் மனது ஆசை.

அந்த எண்ணத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார். தேர்தல் சின்னம் விவகாரத்தில் பிரதமர் எழுதி கொடுப்பதை தான் தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது.

முதல்கட்ட தேர்தல் தமிழ்நாட்டில் வரும் என்பது தெரிந்து தான் பிரதமர் அத்தனை முறை தமிழகத்துக்கு வந்து சென்றுள்ளார். தமிழ்நாட்டில் தான் முதல்கட்ட தேர்தல் வரும் என பிரதமருக்கு எப்படி தெரியும். திருநெல்வேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி ராமசுப்பு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார், தொலைபேசியில் பேசினேன் வாபஸ் வாங்கி விட்டார். இவ்வாறு அவர் கூறினார்.