இந்தியா: தமிழ்நாடு

18 ஆவது இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் திகதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்த நிலையில், புதுச்சேரி துணை நிலை ஆளுநராகவும், தெலுங்கானா ஆளுநராகவும் இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தென் சென்னை நாடாளுமன்ற வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தேர்தல் பிரச்சாரத்தைத் தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் சென்னை மகாலிங்கபுரம் பகுதியில் உள்ள ஐயப்பன் கோவிலின் 50வது தொடக்க விழாவிற்கு சென்ற தமிழிசை சௌந்தரராஜன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

எதற்காக ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டுத் தேர்தலில் நிற்கிறீர்கள் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், 'தமிழகத்தில் பாஜக வளர்ந்து கொண்டிருக்கிறது. என்னையே காலையிலிருந்து ட்விட்டரில் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதைப் பற்றி எல்லாம் நான் கவலைப்படவில்லை. ஏனென்றால் இந்த தாக்குதல் வர வர நாங்கள் ஆக்குதலை அதிகரிப்போம் என தெரிவித்துக் கொள்கிறேன். நிச்சயமாக களம் எங்களுக்கு வெற்றிகரமாக இருக்கிறது. நான் உங்கள் சகோதரியாக, அக்காவாக திரும்பி வந்திருக்கிறேன். திரும்பி வந்துட்டேன்னு சொல்லு’ எனத் திரைப்பட வசனத்தை பேசினார்.