உலக அளவில் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் நோய்கள் அதிகரித்திருப்பதாய் அண்மை ஆய்வொன்று கூறுகிறது. அந்தவகையில் பக்கவாதம், ஒற்றைத் தலைவலி, முதுமை மறதி நோய் ஆகியவை அதிகமானோரைப் பாதிப்பதாக ஆய்வு சொல்கிறது.

2021இல் உலகில் 43 விழுக்காட்டினர், அதாவது 3.4 பில்லியனுக்கும் அதிகமானோர் நரம்பியல் பிரச்சினையைச் சந்தித்திருக்கின்றனர்.

இது நிபுணர்களின் ஊகத்தைக் காட்டிலும் மிக அதிகம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட Institute for Health Metrics and Evaluation (IHME) அமைப்பு வழிநடத்திய ஆய்வில் நூற்றுக்கணக்கான ஆய்வாளர்கள் கலந்துகொண்டனர்.

பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கடந்த முப்பது ஆண்டுகளில் 59 விழுக்காடு அதிகரித்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

அதேசமயம் உலக மக்கள்தொகை விரைவாக அதிகரிப்பதும் மூத்தோர் எண்ணிக்கை கூடுவதும் இதற்கு முக்கியக் காரணங்களாக கூறப்படுகின்றது.