இந்தியா: தமிழ்நாடு
திண்டிவனம் அருகே கூட்டேரிபட்டு நான்குமுனை சந்திப்பில் நேற்று 'என் மண், என் மக்கள்' பாதயாத்திரை மேற்கொண்ட பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது: தமிழகத்தில் இதுவரை 226 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் என் மண், என் மக்கள் யாத்திரை மேற்கொள்ளப்பட்டது.
தமிழக மக்களையும், இளைஞர்களின் வேலை வாய்ப்பை உறுதி செய்வதற்காகவே இந்த யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. இன்னும் சில நாட்களில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் நாடு முழுமைக்கும் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக வேட்பாளர்கள் வெற்றிபெறுவது உறுதி.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அளித்த 511 வாக்குறுதிகளில் ஒரு சில வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த குடும்பத் தலைவிகளில் 38 சதவீதத்தினருக்கு மட்டுமே மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 3.50 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கப்படும் என முதல்வர் தெரிவித்தார். ஆனால் கடந்த இரண்டரை ஆண்டுகளில் 10,600 பேருக்கு மட்டுமே வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி அரசு, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது.
மக்களவைத் தேர்தலைத் தொடர்ந்து, 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜக அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும். அப்போது, தமிழகத்தில் உள்ள 5,400 டாஸ்மாக் கடைகளும், சாராய ஆலைகளும் மூடப்பட்டு, கள்ளுக்கடைகள் திறக்கப்படும். தமிழகத்தில் ஒரு மாவட்டத்துக்கு தலா 2 நவோதயா பள்ளிகள் திறக்கப்பட்டு அனைவருக்கும் சர்வதேச தரத்திலான கல்வி இலவசமாக வழங்கப்படும்.
அரசு வேலை வாய்ப்புகள் அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கப்படும். திமுக மற்றும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் என்னை லேகியம் விற்பவர் எனவும், பூச்சாண்டி எனவும் விமர்சிக்கின்றனர். தமிழக மக்களின் நலனுக்கான லேகியத்தை விற்று வருகின்றேன் என்றார்.
இதேபோன்று,செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் கூட்டுச் சாலையில் நடைபயணம் மேற்கொண்ட அவர், தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு மத்திய அரசு கொடுக்கும் 6,000 ரூபாயோடு, மாநில அரசு சார்பில் ரூ.9,000 சேர்த்து ரூ.15 ஆயிரம் வழங்கப்படும் என்றார்.