இந்தியா: தமிழ்நாடு

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் கட்சி மாநாடு எங்கே நடைபெற உள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியிருப்பதாக அறிவித்தார். அவர், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்றும், 2026 -ம் ஆண்டில் தான் போட்டியிடப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அண்மையில் இரண்டு கோடி உறுப்பினர்கள் என்று இலக்கு நிர்ணயித்து, உறுப்பினர் சேர்க்கைப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துவது தான் நமது முதற்கட்டப் பணியாகும் என்று கூறியிருந்தார். இந்நிலையில், நடிகர் விஜய் கட்சியின் அரசியல் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

குறிப்பாக, தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளை 100 மாவட்டங்களாக்கி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நிர்வாகிகளை நியமிக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. திமுகவுக்கு 72 மாவட்டங்களும் அதிமுகவுக்கு 82 மாவட்டங்களும் இருக்கும் நிலையில் அதற்கும் அதிகமான மாவட்டங்களை உருவாக்க விஜய் திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு எங்கே நடைபெறவுள்ளது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. வரும் ஏப்ரல் மாதம், மதுரை மாவட்டத்தில் முதல் மாநாடு நடைபெற போவதாக தகவல் வந்துள்ளது.

இந்த மாநாடு நெல்லை அல்லது தூத்துக்குடியில் நடைபெறும் என்று கூறிய நிலையில் மதுரையில் நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, 100 மாவட்டங்களுக்கும் நிர்வாகிகள் நியமனம் முடிந்ததும் இந்த மாநாடு நடைபெறவுள்ளதாக தெரிகிறது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.