வடகொரிய அதிபருக்கு ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட புதிய சொகுசு கார் ஒன்றை ஜனாதிபதி விளாடிமிர் புடின் பரிசளித்திருப்பதாக தெரியவந்துள்ளது. வடகொரிய அதிபர் கிம் ஜங் உன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரஷ்யா சென்றார். இந்த பயணத்தின்போது அவர் ரஷ்ய அதிபர் புடினை சந்தித்தார்.

இந்த சந்திப்பில் ரஷ்ய அதிபர் புதின், தான் பயன்படுத்தும் ரஷ்ய தயாரிப்பு சொகுசு காரான அன்ரூஸ் செனட் காரை வடகொரிய அதிபருக்கு காட்டினார். அந்த காரில் வடகொரிய அதிபர் கிம், பின் இருக்கையில் இருந்து பயணம் செய்தார். இந்த நிலையில், வடகொரிய அதிபருக்கு ரஷ்ய அதிபர் புதின் கடந்த ஞாயிற்றுக்கிழமை புதிய கார் ஒன்றை பரிசளித்துள்ளார்.

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட அந்த கார் வடகொரிய அதிபரின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக பரிசளிக்கப்பட்டுள்ளது. பரிசளிக்கப்பட்ட கார் எந்த வகையானது? எவ்வாறு வடகொரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது? என்ற விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. அதேவேளை, கார் பரிசளித்த ரஷ்ய அதிபருக்கு வடகொரிய அதிபரின் தங்கை கிம் யொ ஜாங் நன்றி தெரிவித்தார்.