இந்தியா: தமிழ்நாடு

மதுரையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “எதிர்வரும் தேர்தலில் பிரதமரை தேர்வு செய்யும் கூட்டணியில் அமமுக இடம் பெறும் அல்லது தனித்து போட்டியிடும். ஒருபோதும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பில்லை. தேர்தலில் போட்டியிட எனக்கு விருப்பம் இல்லை. ஆனால் நிர்வாகிகள் கோரிக்கை வைப்பதால் போட்டியிடுவது தொடர்பாக ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

தேர்தல் வெற்றி தோல்வியை கடந்து அரசியல் ரீதியாக நானும் ஓ பன்னீர்செல்வமும் சேர்ந்து பயணிக்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறோம். பொறுத்திருந்து பாருங்கள். இது எந்த அளவுக்கு பலன் தரும் என்பதை தமிழ்நாட்டு மக்கள் முடிவு செய்வார்கள். நாங்கள் சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். கூட்டணி உறுதியான பிறகு அதை நாங்கள் அறிவிக்கிறோம். ஆளுநர் ரவி அவருடைய பதவிக்கு இழுக்கு வராமல் நடந்து கொள்ள வேண்டும். அதுதான் அந்த பதவிக்கும் நல்லது. அதை அவர் பின்பற்றுவார் என்று நம்புகிறோம்.

அமமுக எடப்பாடி பழனிசாமியுடன் சேர்ந்து பயணிக்க விருப்பம் இல்லை. இதுதான் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் விருப்பம். அமமுக யாருக்கும் அடிபணிந்து செல்கின்ற இயக்கம் கிடையாது. அம்மாவின் உண்மையான ஆட்சியை தமிழ்நாட்டில் அமைக்கிற வரை நானும் என்னுடன் பணியாற்றுகிறவர்களும் அதிலிருந்து பின் வாங்க மாட்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.