இந்தியா: தமிழ்நாடு

கோவை மாவட்டம் சிறுமுகையில் இன்று நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ஆ. ராசா கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது...

இப்போது நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் என்பது மிக மிக முக்கியமான ஒன்று. இந்த தேர்தலில் நான் போட்டியிட போகிறேனா இல்லையா என்பது முக்கியம் கிடையாது. இது சாதாரண நாடாளுமன்றத் தேர்தல் அல்ல. இந்த நாடாளுமன்றத் தேர்தல் தான், நாம் இந்திய அரசியல் சாசனத்தை வைத்திருக்க போகிறோமா இல்லையா என்பதை தீர்மானிக்க போகும் தேர்தல்.

இந்த தேர்தலில் மட்டும் நரேந்திர மோடி வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக வந்தால், இந்திய அரசியல் சாசனமே இருக்காது. மதச்சார்பின்மை இருக்காது. உச்ச நீதிமன்றம் இருக்காது. நாடாளுமன்ற சட்டமன்றங்களுக்கு தேவையே இருக்காது. அதன் பிறகு, அதிபர் ஆட்சி தான் இந்தியாவில் நடக்கும். பாஜக இன்று எல்லா துறைகளிலும் மதவாதத்தை புகுத்திவிட்டது. இப்போது அவர்கள் ஒருவித மாய ஆட்சியையும், மதவெறி ஆட்சியையும் தான் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். இந்த தேர்தலுடன் பாஜக ஆட்சிக்கு நாம் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் என ஆ. ராசா பேசினார்.