இந்தியா: தமிழ்நாடு

பாஜகவுடன் கூட்டணியில் இருந்து வந்த அதிமுக கடந்த சில ஆண்டுகளாக கூட்டணியில் இருந்து வெளியேறியது. இனி எந்த தேர்தலிலும் பாஜகவோடு கூட்டணி கிடையாது என்று எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார்.
 
இந்த நிலையில் தான் பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் அதிமுக கூட்டணி தொடர்பாக நேற்று முன்தினம் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. பிரபல வார இதழுக்கு அவர் அளித்த பேட்டியில் சீனிவாசன் கூறுகையில், "கடந்த 2019 லோக்சபா தேர்தல், 2021 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல்களை பாஜக உடன் கூட்டணி வைத்துத் தான் அதிமுக தேர்தலைச் சந்தித்தது.

ஆனால், இப்போது கூட்டணி இல்லை என்கிறார்கள். பசு தோல் போர்த்திய புலி போல இருந்தால் அதைப் பொதுமக்கள் நம்ப மாட்டார்கள். பொதுமக்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. பாஜக உடன் கூட்டணிக்கு வராவிட்டால் வரும் காலங்களில் அதிமுக அரசியல் ரீதியாக வருத்தப்பட வேண்டி இருக்கும். இங்கு அனைவரும் பாஜகவைச் சாதாரணமாகக் கருதுகிறார்கள்.

ஆனால், அப்படி இல்லை என்பதை அவர்களே தெரிந்து கொள்வார்கள். அதிமுக பெரிய விலை கொடுக்க நேரிடும்"என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுகவை மிரட்டவோ ஒடுக்கவோ முடியாது என்று காட்டமாக பேசினார். எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

அதிமுகவை, தீயசக்தி திமுகவோடு இணைந்து அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள் என்பதுதான் வரலாறு. அதிமுகவை யாரும் அடிமைப்படுத்த முடியாது. யாரும் வீழ்த்த முடியாது. எதிரிகளோடு கை கோர்த்து அதிமுகவை அழிக்க பார்த்தார்கள். தர்மம் நீதி, நியாயம் வென்றது. நீதிமன்றத்தின் மூலம் நல்ல தீர்ப்பை பெற்றோம். அதிமுக இனி தொண்டர்களுக்கு சொந்தம்.

நான் தொண்டனாக இருந்து படிப்படியக உயர்ந்து இந்த இடத்திற்கு வந்துள்ளேன். அதிமுக மட்டும் தான் ஜனநாயக முறைபப்டி இயங்கும் கட்சி. இங்குதான் உழைக்கிறவர்களுக்கு மரியாதை கிடைக்கும். அதிமுக 2 கோடி தொண்டர்களுக்கு சொந்தமானது. யாரும் அபகரிக்க முடியாது. அதிமுகவில் யார் வேண்டுமானாலும் பொதுச்செயலாளராக வரலாம். இது தனிப்பட்ட யாருக்கும் சொந்தமானது இல்லை.

அதிமுக தெய்வத்தால் உருவாக்கப்பட்ட இயக்கம். அதிமுகவை எவராலும் அழிக்கவும் முடியாது. முடக்கவும் முடியாது. ஒடுக்கவும் முடியாது. அதிமுக ஆட்சியில் நிறைய திட்டங்களை செய்து கொடுத்தோம். இவ்வாறு அவர் கூறினார்.