Whangamatā விற்கு அருகே கடலில் 23.5 மணிநேரம் தத்தளித்த ஒரு நபர் அதிர்ஷ்டவசமாக காப்பாற்றப்பட்டுள்ளார்.

ஜனவரி 2 ஆம் திகதி அந்த நபர் தனது 40 அடி படகில் தனியாக மீன்பிடிக்கச் சென்றதாக Whangamatā காவல்துறை சார்ஜென்ட் வில் ஹமில்டன் தெரிவித்தார்.

இந்நிலையில் North Island இன் கடற்கரையில் இருந்து சுமார் 55 கிலோமீட்டர் அல்லது 30 கடல் மைல் தொலைவில் அவர் படகில் இருந்து வீழ்ந்தார்.

படகை அவரால் பிடிக்க முடியவில்லை, அது கைக்கு எட்டாத தூரத்தில் இருந்தது, இதனையடுத்து அந்த நபர் Alderman Islands இற்கு நீந்த முயன்றார், ஆனால் நீரோட்டத்தால் அவர் இழுத்துச் செல்லப்பட்டார்.

அவர் கடலில் குளிரான இரவைச் எதிர்க் கொண்டார், நீந்த முடியாமல் மிகவும் சோர்வடைந்தார்.‌ மேலும் அவர் தண்ணீரில் இருந்த நேரத்தில், ஒரு சுறா தாக்க வந்தது. இருப்பினும் அவர் அதிர்ஷ்டவசமாக தாக்கப்படவில்லை.

இதனையடுத்து புதன்கிழமை பிற்பகல் 2 மணியளவில், மேயர் தீவு அருகே ஒரு படகில் மூன்று மீனவர்கள் தண்ணீரில் ஒரு அசாதாரண பிரதிபலிப்பு ஒளியை கவனித்தனர்.

இந்நிலையில் அவர்கள் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த நபரை கண்டுபிடித்தனர், அவர் தனது கடிகாரத்தில் சூரியனின் பிரதிபலிப்பைப் பயன்படுத்தி அவர்களின் கவனத்தை ஈர்த்தார்.

மூவரும் அவரை உடனடியாக தண்ணீரில் இருந்து மீட்டு,  காவல்துறைக்கு தகவல் வழங்கினர்.

பின்னர் Whangamatā மெரினாவுக்குச் அவரை அழைத்து சென்றனர்.

அந்த மீனவர் உயிருடன் இருப்பது ஒரு "முழுமையான அதிசயம்" என்று ஹமில்டன் கூறினார்.

அந்த நபர் சோர்வுடன் இருந்தார், மேலும் கரையில் உள்ள ஆம்புலன்ஸ் குழுவினரிடம் சிகிச்சை பெற்றார்.

சம்பந்தப்பட்ட அனைத்து அவசர சேவைகளுக்கும், தன்னைக் காப்பாற்றிய மைக், டைலர் மற்றும் ஜேம்ஸ் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்க விரும்புவதாக அந்த நபர் கூறினார்.

செய்தி நிருபர் - புகழ்