தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்த ஜோதிகா, உச்சத்தில் இருக்கும் போதே நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்டார். கல்யாணத்திற்கு பின்னர் சினிமாவிற்கு முழுக்கு போட்ட ஜோதிகா, எட்டு ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் திரையுலகில் தனது பயணத்தை துவங்கினார். கதாநாயகியை முன்னிலைப்படுத்தி வெளியான '36 வயதினிலே' படம் மூலமாக ரீ என்ட்ரி கொடுத்தார்.

அதனை தொடர்ந்து கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் அண்மையில் வெளியான 'காதல் தி கோர்' படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டிக்கு ஜோடியாக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுக்களை அள்ளினார் ஜோதிகா. விமர்சகர்கள் மத்தியிலும் இப்படம் பாராட்டுக்களை அள்ளி வருகிறது.

இந்நிலையில் இப்படத்திற்கு பின்னர் பல நேர்காணல்களில் கலந்துக்கொண்டு பேசி வருகிறார் ஜோதிகா. அந்த வகையில் 'நீயா நானா' கோபிநாத்துடனான நேர்காணலில் 'வாலி' படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தது குறித்து பேசியுள்ளார். அதில், தமிழில் நான் கதாநாயகியாக அறிமுகம் ஆக வேண்டிய முதல் படம் 'வாலி' தான்.

சிம்ரன் ரோலில் நடிக்க முதலில் என்னை தான் அணுகினார் எஸ்.ஜே. சூர்யா. நானும் அந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தேன். ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக 'வாலி' படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது. அதனால் அந்தப்படத்தில் இருந்து வெளியே வந்து விட்டேன்.

அதன்பின்னர் மீண்டும் என்னிடம் 'வாலி' படத்தில் சின்ன கெஸ்ட் ரோல் பண்ணுவீங்களான்னு எஸ்.ஜே. சூர்யா கேட்டார். நான் அந்தப்படத்தை விட்டு வந்திருக்க கூடாது. என்னுடைய தப்பு தான் அது. கண்டிப்பா இந்த ரோலில் நடிக்கிறேன் என சொல்லி தான் 'வாலி' படத்தில் அந்த கெஸ்ட் ரோலில் நடித்தேன் என தெரிவித்துள்ளார் ஜோதிகா.

அதனை தொடர்ந்து எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் விஜய் ஜோடியாக 'குஷி' படத்தில் ஹீரோயினாக நடித்து ஜோதிகா பாராட்டுக்களை அள்ளியது குறிப்பிடத்தக்கது.