பொதுவாக கணவன் மனைவி என்றாலே முட்டல், மோதல் இருக்கும்தான். சில தம்பதிகள் ஓயாமல் நாள் முழுக்கக் கூட சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள். அப்படியாகதான் ஒரு தம்பதி விமானம் என்று கூட பார்க்காமல் போட்ட சண்டையில் விமானத்தை செல்லும் வழியில் பாதியிலேயே தரையிறக்கி இருக்கிறார்கள்.

ஜெர்மனியில் இருந்து பாங்காங் புறப்பட்ட லுஃப்தான்சா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றில் கணவன் – மனைவி ஒருவர் பயணித்துள்ளனர். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது ஓவராக மது அருந்தியிருந்த கணவர் தன் மனைவியிடம் சண்டை போட தொடங்கியுள்ளார். பதிலுக்கு மனைவியும் பாய, நடுவானில் விமானத்தில் பெரும் சண்டை மூண்டுள்ளது. அவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அமர வைக்க விமான பணிப்பெண்கள், சக பயணிகள் எவ்வளவோ முயன்றும் அவர்கள் சண்டையை நிறுத்தவே இல்லையாம்.

இதனால் ஓரளவுக்கு மேல் பொறுமை இழந்த விமானி விமானத்தை தரையிறக்குவதே சரி என்று முடிவு செய்து பாகிஸ்தானில் தரையிறக்க அனுமதி கேட்டுள்ளார்.

ஆனால் அவர்கள் மறுக்கவே தொடர்ந்து பயணித்து வந்து டெல்லி விமான நிலையத்தில் தரையிறக்கி உள்ளனர். பின்னர் அங்கு அந்த கணவரை போலீஸிடம் ஒப்படைத்துவிட்டு மீண்டும் பாங்காங் நோக்கி பயணித்துள்ளது அந்த விமானம்.

தொழில்நுட்ப கோளாறு, மருத்துவ அவசரம் உள்ளிட்ட காரணங்களால் விமானங்கள் இதுபோல அவசரமாக தரையிறங்குவது வழக்கம்தான். ஆனால் கணவன் மனைவி சண்டையால் ஒரு விமானம் அவசர தரையிறக்கம் செய்யப்பட்ட சம்பவம் பலருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.