இந்தியா: தமிழ்நாடு

திருச்சியில் நடைபெறவுள்ள வெல்லும் சனநாயகம் மாநாட்டிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், மது அருந்தும் பழக்கம் உடையவர்கள், ஒழுங்கீனமாக நடந்து கொள்பவர்களை அழைத்து வரக் கூடாது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர்களுக்கு திருமாவளவன் கண்டிஷன் போட்டுள்ளார்.

அதேபோல் மாநாட்டிற்கு மூன்றில் ஒரு மடங்காவது பெண்களை அணி திரட்டி வருவதற்கான முயற்சிகளை மும்மரமாக மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். வெல்லும் சனநாயகம் மாநாட்டிற்கு மக்களை திரட்டுவது தான் மாவட்டச் செயலாளர்களின் முதன்மையான பணியாக இருக்க வேண்டும் என்ற திருமாவளவன், கட்சியின் செயற்குழு கூட்டங்கள், ஆர்ப்பாட்டம், கருத்தரங்கம் என்று நடத்தும் போதெல்லாம் நிர்வாகிகள் வந்து கலந்து கொள்வது என்பது வேறு, ஆனால் மாநாடு என்று வரும் போது மக்களை திரட்டி வர வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.

ஏனோ தானோ என்று கணக்கு சொல்லாமல், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒன்றிய வாரியாக ஒவ்வொரு முகாமிலிருந்தும் எத்தனை பேர் மாநாட்டிற்கு வருகிறார்கள் என்ற எண்ணிக்கையை துல்லியமாக சொல்ல வேண்டும் என திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார். அதேபோல் மாவட்ட வாரியாக மாநாட்டிற்கு எத்தனை வாகனங்கள் வருகின்றன என்ற விவரத்தையும் துல்லியமாக கணக்கெடுத்து சொல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

வெல்லும் சனநாயகம் மாநாட்டிற்கு வரும் வாகனங்களில் முன்பும்- பின்பும் பேனர் கட்ட வேண்டும் என்றும் அதில் எந்த மாவட்டம், ஒன்றியம், முகாம் உள்ளிட்ட பெயர் விவரங்கள் இடம் பெற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். எல்லாவற்றையும் விட விளம்பரம் முக்கியம் எனக் கூறிய அவர், தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகளில் வழிநெடுக்கும் மாநாட்டு விளம்பரங்கள் இடம் பெற வேண்டும் என்றதுடன் "வெல்லும் சனநாயகம் மாநாடு" ''சிறுத்தைகளின் அடுத்த பாய்ச்சல்' என்று வாசகத்தோடு இணைத்தே எழுத வேண்டும்‌ என்றும் "வெல்லும் சனநாயகம்" என்ற இரு வார்த்தைகளும் பெரிய எழுத்துகளில் எழுத வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

வெல்லும் சனநாயகம் மாநாடு ஆயத்தப் பணிகள் குறித்து கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கரூர் ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கான மண்டல அளவிலான பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டத்தில் இவ்வாறு திருமாவளவன் பேசியிருக்கிறார்.